மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!

By காமதேனு

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக தக்காளி செடியிலேயே அழுகி வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் பகுதிகளில் சாகுபடி செய்த தக்காளி பழங்கள் அழுகி வருகின்றன. உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் தக்காளி மீண்டும் விலை உச்சத்தை தொடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பயிரிடப்பட்டுள்ள செடியில் பூ, பிஞ்சு, இலைகள் என்று எதுவும் இல்லை. மழையால் தக்காளி விளைச்சல் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் தக்காளி வரத்து வெகுவாக குறையும் அபாயமும் உள்ளது.

தென்மேற்கு பருவ மழைக் காலத்திலும் இதே போன்ற நிலை ஏற்பட்டதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு கிலோ 200 ரூபாய் வரை விற்றது. தற்போது வடகிழக்கு பருவமழையிலும் அதேபோல நிலைமை உருவாகியுள்ளது.

தக்காளி

அதே நேரத்தில் விவசாயிகள் மீண்டும் தக்காளி நடவு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். அவை தை மாதத்தில்தான் அறுவடைக்கு வரும். எனவே, வெளியூர் வரத்து இல்லாவிட்டால் தக்காளி விலை உச்சத்தைத் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தக்காளி விலை அதிகமாக உயரும் என்ற அச்சம் வியாபாரிகளிடம் உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE