வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலய பகுதி நீர்நிலைகள்: விநாயகர் சிலைகளை கரைக்க தடை

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு ஆட்சியர் ச.அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களிலும், விநாயகர் கோயிலுக்கு முன்பும் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகர் சிலைகள் தயாரிப்பு, பிரதிஷ்டை மற்றும் கரைப்பது தொடர்பாக ஆட்சியர் அருண்ராஜ் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘சிலை நிறுவப்படும் இடம், அரசு பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் பெற வேண்டும்.

சிலை நிறுவப்பட்டுள்ள தற்காலிக கொட்டகையில் தீ தடுப்பு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவுவதற்காக பந்தல்கள் அமைக்கும் அமைப்புகள் அருகில் இருக்கும் காவல் மற்றும் தீயணைப்புத் துறையினரின் தொடர்பு எண்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மத வழிபாட்டு பகுதிகள் அருகில் சிலைகள் நிறுவுவதை தவிர்க்க வேண்டும்.

விநாயகர் சிலைகளை களி மண்ணால் மட்டுமே தயாரிக்க வேண்டும். சிலை மீது ரசாயன வண்ணம் பூசியிருக்கக் கூடாது, சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. அரசியல் பிரமுகர்கள் புகைப்படத்துடன் விநாயகர் சிலை நிறுவுவது தொடர்பாக விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது. சிலை அமைப்பாளர்கள் சிலை பாதுகாப்பிற்கு குறைந்தது இரண்டு தன்னார்வலர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் தினத்தன்று பகல் 12 மணிக்குள்ளாக அனுமதிக்கப்பட்ட வழியில் கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. கடற்கரைப் பகுதியில் தண்ணீரில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன்பாக பூஜை பொருட்களான பூமாலை, அலங்கரிக்கப்பட்ட பொருட்கள் அகற்றப்பட வேண்டும். வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது. அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்’ என்று ஆட்சியர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE