கிடுகிடுவென உயரும் அரிசி விலை... கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

By காமதேனு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், அடித்தட்டு மக்கள் பட்டினி கிடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல் சாகுபடி

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பால், வெங்காயம், பூண்டு, தக்காளி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அத்தியாவசிய பொருளான பாலின் விலை சுமார் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், மற்றொரு அத்தியாவசியமான பொருளான அரிசியின் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது.

கடந்த 6 மாத காலத்தில் மட்டுமே ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.15/- முதல் ரூ.17/- வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதாரண ரக அரிசி தற்போது ஐம்பது ரூபாயைக் கடந்துள்ளது. கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர் ரக அரிசி தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிரியாணிக்கு பயன்படுத்தப்படும் அரிசி 20 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

அரிசி முட்டைகள்

அரிசியின் இந்த விலை உயர்வுக்கு நீர்வரத்து சரிவர இல்லாததால் நெல் சாகுபடி குறைந்தது மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. அத்துடன் வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதி அதிகரித்ததும் ஒரு காரணம் என தகவல்கள் கூறுகின்றன. இதனால் இதற்கு முன் ரூ.2,000/- க்கு விற்ற ஒரு மூட்டை அரிசியானது தற்போது ரூ.3,000/-க்கு விற்கப்படுகிறது.

இந்நிலை சீராக வேண்டும் என்றால் அடுத்த ஆண்டு சாகுபடி நடந்து அதிக நெல் உற்பத்தி செய்யப்படவேண்டும். அதற்கு இன்னும் ஒரு வருட காலம் ஆகும் என்பதால் அரிசியின் விலை தற்போது குறைய வாய்ப்பில்லை, மாறாக இன்னும் உயரவே வாய்ப்பு அதிகம் என்று கூறுகிறார்கள். இது இல்லத்தரசிகளின் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ரேஷன் அரிசி வாங்கி உண்ணும் ஏழை எளிய மக்கள் அது போதாதபோது வெளிமார்க்கெட்டில் அரிசி வாங்க நேரிடுகிறது. அவர்களால் இந்த விலைக்கு அரிசி வாங்க இயலுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனால் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE