பட்டாசு வெடித்து கமகமக்கும் கறிச்சோறு சாப்பிட்டால் தான் தீபாவளி!

By காமதேனு

தீபாவளி பண்டிகை என்றால் இனிப்பு, பட்டாசு, எண்ணெய்க் குளியல் என்பது எவ்வளவு கட்டாயமோ அதுபோல பெரும்பாலானவர்களின் இன்னொரு கட்டாய பழக்கம் அன்றைய தினம் கறிச்சோறு தின்பது. தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு ஆட்டுச் சந்தையிலும் 5 கோடிக்கு வியாபாரம், 10 கோடிக்கு வியாபாரம் நடந்தது என்று கடந்த சில நாட்களாகவே செய்தித்தாள்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

அந்த அளவிற்கு தீபாவளி நாளில் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்படும். மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று இறைச்சி வாங்கிச் செல்வது எல்லா ஊர்களிலுமே காணக் கிடைக்கும் காட்சிதான்.

தீபாவளி அன்று காலையில் கறிக்குழம்பு சாப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டின் பல ஊர்களில் பின்பற்றப்படுகிறது. தீபாவளி வடஇந்திய திருவிழாவாக இருந்தாலும், மெல்ல மெல்ல தென்னிந்தியாவில் பரவி, இங்கும் அது முக்கியமான திருவிழாவாக மாறிவிட்டது.

இதில் கறிக்குழம்பு சாப்பிடும் பழக்கம் தமிழ்நாட்டில் எப்படி வந்தது என்பது விந்தையாகவே இருக்கிறது. இட்லி-ஆட்டுக்கறி குழம்பு, அல்லது கோழிக் கறிக்குழம்பு போன்றவற்றை தீபாவளி அன்று காலையில் சமைத்து உண்பதும், ஒரு சில வீடுகளில் மதிய உணவாக கறிச்சோறு விருந்து உண்பதும் தற்போது மரபாகவே பின்பற்றப்படுகிறது. பட்டாசு வெடித்து இனிப்பு சாப்பிட்டு தீபாவளி கொண்டாடினாலும் கறிக்குழம்பு சாப்பிட்டால் தான் அன்றைய தினம் பண்டிகை கொண்டாட்ட மனநிலை மக்களிடம் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் இந்த வழக்கம் இருப்பதால், தீபாவளி நாளன்று ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும். ஒரு சில ஊர்களில், குழுவாக சேர்ந்து உறவினர்கள் ஆடு வாங்கி, தங்களுக்குள் பங்கு பிரித்து பங்குக்கறி வாங்கிக்கொள்ளும் நடைமுறையும் இருக்கிறது.

தீபாவளி திருவிழா நம்முடைய நிலப்பரப்பில் தொடர்பு இல்லாத விழாவாக இருந்தாலும், கொண்டாடும் நேரத்திற்கான உணவாக அசைவ உணவு அமைந்துவிட்டது. மேலும், சிறப்பான உணவு என்ற அந்தஸ்தை பலகாலமாக அசைவ உணவு பெற்றதால், திருவிழா நாளன்று, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரும் சாப்பிடும் உணவு கறிச்சோறாக ஆகியுள்ளது.

கறிக்கடை முன்பு காத்திருக்கும் கூட்டம்.

கறிசோறு சாப்பிடுவதற்கான தனிப்பட்ட சிறப்பான காரணங்கள் ஏதுமில்லை. ஆனால் அசைவ உணவு உயர்ந்தது, அதுதான் சிறந்தது என்ற மனப்பான்மையில் இருந்துதான் கறிச்சோறு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பல ஏழைக் குடும்பங்களில் கறிச்சோறு என்பது மிகவும் அரிதான ஒன்று.

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அதற்காக காசு சேர்த்து வைத்து அதை வாங்கி சமைத்து உண்ணுவதன் மூலம் அவர்களின் ஏக்கம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்படுகிறது. நடுத்தர வர்க்க மக்கள் பிழைப்புக்காக வெளியூர்களில் தங்கியிருந்து அங்கு கிடைக்கும் உணவைச் சாப்பிட்டு வாழ்கிறார்கள்.

இதுபோன்ற பண்டிகை நாளில் சொந்த ஊரில் ஒன்றாக கூடும்போது விசேஷ உணவாக கறிச்சோறு சாப்பிடுகின்றனர் என்பதும் ஒரு காரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE