புதுச்சேரி: சுற்றுச்சூழலுக்கு உகந்த இ-ரிக்ஷாக்களை புதுச்சேரியில் அறிமுகம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், முதற்கட்டமாக 38 இ-ரிக்ஷாக்களை வாங்க போக்குவரத்து துறை ஆர்டர் செய்துள்ளது. இந்த வாகனங்கள் புதுச்சேரி நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் இயக்கப்பட உள்ளன.
புதுச்சேரியில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க, ‘மின்சார வாகனக் கொள்கை’ அரசின் பரிசீலனையில் உள்ளது.
இதன் அங்கமாக, ‘அனைத்து மின் வாகனங்களுக்கும் தகுந்த மானியம் வழங்கி, பொதுமக்கள் மின்சார வாகனங்களை அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். மின்சார வாகனங்களுக்கு சாலை வரி செலுத்துவதில் இருந்து 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும். பொது மற்றும் தனியார் இடங்களில் ‘சார்ஜிங் ஸ்டேஷன்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
இத்திட்டங்களின் முதற்படியாக, புதுச்சேரி நகரப் பகுதியின் பொதுப் பயண தேவையை கருத்தில் கொண்டு, ஒயிட் டவுண் பகுதிகளில் விரைவில் இ-ரிக்ஷாக்களை அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது.
» 'கையெழுத்து சரியில்லை' என 6 வயது சிறுமிக்கு ஸ்கேலால் அடி: டியூஷன் ஆசிரியை மீது வழக்கு
» ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங்: தொடங்கினார் நடிகர் ரஜினிகாந்த்!
ஏற்கெனவே டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் போன்ற நகரங்களில் இ-ரிக்ஷாக்கள் பிரபலமானவை. இந்த இ-ரிக்ஷாக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, கட்டணக் குறைவான போக்குவரத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரியில் இயங்கும் இ-ரிக்ஷாக்கள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இந்த இ-ரிக்ஷாக்கள் மூலம் குறுகிய சாலைகள், ஒடுங்கிய தெருக்களிலும் சென்று வர முடியும்.
புதுச்சேரியை பொருத்தவரையில் மக்களுக்கான பொது போக்குவரத்து வசதிகள் மிகக்குறைவாக உள்ளது. இதனால் இ-ரிக்ஷாக்கள் அவசியமான ஒன்று. இதற்காக முதற்கட்டமாக 38 இ-ரிக்ஷாக்களை வாங்க புதுச்சேரி போக்குவரத்து துறை ஆர்டர் செய்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: புதுச்சேரி நகரப் பகுதியில் இ-ரிக்ஷாக்களை இயக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில், 38 இ-ரிக்ஷாக்கள் வாங்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய இந்த வாகனம், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 85 கி.மீ வரை செல்லும்.
இதை இயக்க தனி விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உரிமம், பதிவு மற்றும் அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ளோம். இந்த இ-ரிக்ஷாவில் மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புடன் பயணம் செய்யலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இ-ரிக்ஷா ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு போக்குவரத்துத் துறை உதவும். கட்டணத்தை போக்குவரத்து துறை நிர்ணயம் செய்யும். வாகனங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியவை நகராட்சியால் ஏற்கப்படும்.
இந்த இ-ரிக்ஷாக்கள் ஒரே மாதிரியான வண்ணத்தில் இருக்கும். இதன் மூலம் பொதுமக்கள் இதை பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். இவற்றில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு, போக்குவரத்துத் துறையினரால் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். அதன் மூலம் நகரில் இயங்கும் ஒவ்வொரு இ-ரிக் ஷாவும் கண்காணிப்பில் இருக்கும் என்று தெரிவித்தனர்.