திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் திண்டுக்கல் அருகே மும்முரமாக நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் ஊர்வலமாக சென்று திண்டுக்கல் மலையடிவாரத்தில் உள்ள கோட்டைக்குளத்தில் கரைப்பது வழக்கம். இதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தேவையான விநாயகர் சிலைகளை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் ஒரு அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் காகிதக் கூழ், கிழங்குமாவு ஆகியவற்றை கொண்டு விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர். தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு இறுதி வடிவமாக வர்ணங்கள் பூசப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு குபேர விநாயகர், வில் அம்பு விநாயகர், சிங்கம் மேல் விநாயகர், சிவலிங்க விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. வக்கம்பட்டியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களான மதுரை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
» கூடலூர் அருகே ஆதிவாசி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்!
» மகனின் சிகிச்சைக்காக பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற தந்தை @ கோவை
பக்தர்கள் ஊர்வலம் நடத்துவதற்காக ஆர்டர் கொடுத்தும் விநாயகர் சிலைகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய் முதல் ரூ.20 ஆயிரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விநாயகர் சிலை தேவைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பசுமை காக்கும் விதை விநாயகர்: "திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் விதை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் வைத்து வழிபடும் வகையில் 8.5 இன்ச் உயரமுள்ள இந்த விதை விநாயகர் சிலைகள் ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இந்த சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் செய்யும்போதே இதனுள் விதைகள் வைத்து தயாரிக்கப்படுகிறது.
விநாயகர் சிலைகளை கரைக்கும்போது அதில் உள்ள விதைகள் முளைக்கும் தன்மையுடன் இருப்பதால் முளைத்து மரமாக வளர வாய்ப்புள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையாக்கவும் இந்த விநாயகர் சிலைகளுக்குள் விதை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விதை விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது” என இயற்கை ஆர்வலர் சிவபாலன் தெரிவித்தார்.