சிங்கப்பூரில் கரோனா பரவல்: கோவை வரும் விமான பயணிகளிடம் பரிசோதனை தீவிரம்

By KU BUREAU

கோவை: கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் ஷார்ஜாவுக்கும், வாரத்தில் ஐந்து நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களையடுத்து கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் கூறும்போது, “விமான நிலையத்தில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு கண்டறிய தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.

சிங்கப்பூரில் புதிய வகை கரோனா பரவல் காரணமாக பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறையுடன் இணைந்து பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

கோவை சுகாதார பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும்போது, “கடந்த முறை கரோனா தொற்று பரவியபோது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவல் குறித்து தற்போது பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.

சிங்கப்பூரில் பரவிவரும் கரோனா தொற்று தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் பிரத்யேக தகவல் வந்தால் கடைபிடிக்கப்படும்” என்றார்.

மோசமான வானிலையால் விமான இயக்கம் பாதிப்பு: கோவை விமான நிலைய இயக்குநர் செந்தல் வளவன் கூறும் போது, “கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் நேற்று இரவு 8 மணி வரை விமான இயக்கம் பெரியளவில் பாதிக்கப்படவில்லை.

விமானங்கள் இயக்கத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் மோசமான வானிலை காரணமாக விமானங்கள் குறித்த நேரத்தில் ஓடுபாதையில் தரையிறங்க முடிவதில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE