பள்ளி மாணவர்களுக்கான மதிய சத்துணவில் இனி பிரியாணி... அரசின் அடடே திட்டம்

By காமதேனு

பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவாக இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

பள்ளி பிராயத்து மாணவர்களின் உடல்நலம் பேணுவதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தின் குழந்தைகளை மனதில் கொண்டும் தமிழகத்தில் அறிமுகமான மதிய உணவுத் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றது. அடுத்தடுத்த ஆட்சியாளர்களால் அவை மேலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது மதிய உணவோடும், காலை சிற்றுண்டியும் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முன்னோடி திட்டத்தை இதர மாநிலங்களும் பின்பற்றத் தலைப்பட்டிருக்கின்றன.

மதிய உணவில் முட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகள் மத்தியில் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் தவிப்பதாக தெரிவிக்கிறது. இதனை நிவர்த்தி செய்ய பள்ளி மதிய உணவுடன் முட்டை அல்லது வாழைப்பழம் சேர்த்து வழங்கப்பட்டன. இதன் அடுத்தக்கட்டமாக வாரத்தின் குறிப்பிட்ட தினங்களில் முட்டை பிரியாணியாக வழங்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி வாரம்தோறும் புதன் மற்றும் வெள்ளி என இரு தினங்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முட்டை பிரியாணிக்கு பதில், வழக்கமான மதிய உணவு மற்றும் அவித்த முட்டையாகவும் பெற்றுக்கொள்ளலாம். முட்டை வேண்டாம் என்பவர்களுக்கு வாழைப்பழம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிய உணவில் முட்டை

வெறுமனே முட்டை வழங்குவதற்கு பதில், முட்டை பிரியாணியாக வழங்கினால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் என ஆய்வில் பெரும்பான்மையினோர் கருத்து தெரிவித்ததில் மாநில அரசு பரிசோதனை முயற்சியாக இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.

இதற்கு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட உணவு விநியோக சேவை நிறுவனங்களின் ஆய்வின்படி, இந்தியர்களுக்கு அதிகம் பிடித்த உணவாக பிரியாணி முன்னிலை வகித்து வருகிறது. அது பள்ளி மாணவர் மத்தியிலும் எதிரொலித்ததில் ஆச்சரியமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE