சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்! உதகை மலை ரயில் 16ம் தேதி வரை ரத்து

By காமதேனு

மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை, வருகிற நவம்பர் 16ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம்- உதகை இடையே எழில் சூழ்ந்த மலை மற்றும் வனப்பகுதிகளுக்கு இடையே செல்லும் இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மலை ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ள பாறைகளை அகற்றும் பணி தீவிரம்

இந்நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது. இவற்றை அகற்றும் பணியில் ரயில்வே துறை ஊழியர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் பல இடங்களில் மண் சரிவுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவதால் இந்த பணிகள் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

அடுத்தடுத்து மண் சரிவுகள் ஏற்படுவதால் மலை ரயில் சேவை ரத்து

இந்த நிலையில் பருவமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம்- உதகை இடையேயான மலை ரயில் சேவையை வருகிற நவம்பர் 16ம் தேதி வரை ரத்து செய்வதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் தீபாவளி பண்டிகைக்காக உதகைக்கு செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE