‘தமிழ் மொழியை 22 ஆண்டுகளாக தவிர்க்கும் ஞானபீட விருது’ கவிஞர் வைரமுத்து கவலை

By காமதேனு

இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து கவலை பகிர்ந்திருக்கிறார்.

உருது கவிஞரும், இந்தி சினிமா பாடலாசிரியருமான குல்சார் மற்றும் சம்ஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம்பத்ரச்சார்யா ஆகியோருக்கு 2023-ம் ஆண்டின் ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட தேர்வுக்குழு வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து, இலக்கிய ஆளுமைகள் இருவருக்கும் வாழ்த்துகள் பெருகி வருகின்றன.

குல்சார் உடன் வைரமுத்து

அவற்றின் அங்கமாக கவிஞர் வைரமுத்தும் தனது வாழ்த்தினை எக்ஸ் தள பதிவாக வெளியிட்டுள்ளார். அதில் விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட குல்சாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் பலவற்றில், தமிழில் வைரமுத்தும், இந்தியில் குல்சாரும் பாடல் வரிகளை எழுதிய வகையில் இருவரும் இணைந்தும் பணியாற்றி உள்ளனர். இதனையும் தனது வரிகளில் வைரமுத்து நினைவுகூர்ந்துள்ளார்.

கூடவே, ஞானபீட விருது கடந்த 22 ஆண்டுகளாக தமிழை புறக்கணித்து இருப்பது குறித்து கவலையும் பகிர்ந்திருக்கிறார். தனது எக்ஸ் தள பதிவில் அதனை கவிதையாகவே பதிவிட்டிருக்கிறார்.

சமஸ்கிருத மொழிக்காக

சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும்

உருது மொழிக்காக

இலக்கிய ஆளுமை குல்சாரும்

இந்த ஆண்டு ஞானபீட விருதைப்

பகிர்ந்துகொள்வது

மகிழ்ச்சி தருகிறது

இரு பேராளுமைகளுக்கும்

வாழ்த்துக்கள்

ஜெயகாந்தனுக்குப் பிறகு

ஞானபீடம்

தமிழ்மொழியை 22ஆண்டுகள்

தவிர்த்தே வருவது

தற்செயலானதன்று என்று

தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது

முழுத் தகுதிகொண்ட

முதிர்ந்த பல படைப்பாளிகள்

காலத்தால்

உதிர்ந்தே போயிருக்கிறார்கள்

வேண்டிப் பெறுகிற இடத்தில்

தமிழ் இல்லையென்ற போதிலும்

தூண்டிவிடுவது கடமையாகிறது

இதனையடுத்து, ஞானபீட விருது தமிழை தொடர்ந்து புறக்கணிப்பது குறித்து பலரும் தங்களது அதிருப்தி மற்றும் ஆதங்கம் ஆகியவற்றை பதிவிட்டு வருகின்றனர். விருது அரசியல் குறித்தும் சிலர் சீற்றம் தெரிவித்து வருகின்றனர். ’வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும், தூண்டிவிடுவது கடமையாகிறது’ என தனது வரிகளில் வைரமுத்து தெளிவாக குறிப்பிட்ட பின்னர், மறுமொழி பதிவிட்ட சில ‘கவிஞர் வைரமுத்து தனக்கு விருது கிடைக்காததில் இப்படி பதிவிட்டிருக்கிறார்’ என்றும் சாடியுள்ளனர். எனினும் தமிழ் தொடர்ந்து புறக்கணிப்படுவது தொடர்பான வைரமுத்துவின் ஆதங்கம் சமூக ஊடகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE