இனி குறுவையை காப்பாற்ற முடியாது - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

By காமதேனு

காவிரியில் நீர் இல்லாததால் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை பயிர்கள் கருகும் நிலையில், இனி அவற்றை காப்பாற்ற முடியாது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலம், மாவூர், கச்சனம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பாதிப்பை பார்வையிட்டார். அதன்பின் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: "காவிரி டெல்டாவில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று 5 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். காவிரி நீர் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த டெல்டாவும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிர்கள் கருகுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.

இனி குறுவையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. உடனடியாக உயர்மட்டக் குழுவை முதலமைச்சர் அனுப்பி வைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். மூன்றாவது ஆண்டாக குறுவை காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தாமல் தமிழக அரசு கைவிட்டதால் விவசாயிகள் இழப்பீடு பெற முடியாத நிலையில் பாதிப்பிற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக வணிக நல வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வணிகர்களைக் கொண்ட நல வாரியமாக மாற்றிட, மற்ற வாரியங்களை பின்பற்றி செயல்படுத்திட முன்வர வேண்டும். உழவர் நலவாரியத்தையும் உழவர்களைக் கொண்டு அமைத்திட வேண்டும்" என்று பி.ஆர். பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE