கோவை: மகனின் சிகிச்சை செலவுக்கு பணம் தேவைப்பட்டதால், பிரியாணி சாப்பிடும் போட்டியில் பங்கேற்று டாக்சி டிரைவர் ஒருவர் பரிசுத்தொகையை வென்றார்.
கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் பகுதியில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கு வாடிக்கையாளர்களை கவரும் நோக்கத்தில் பிரியாணி சாப்பிடும் போட்டி அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டியில் அரை மணி நேரத்தில் 6 பிளேட் பிரியாணி சாப்பிடுபவருக்கு ரூ.1 லட்சம், 4 பிளேட் பிரியாணி சாப்பிடுவோ ருக்கு ரூ.50 ஆயிரம், 3 பிளேட் பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் என பிரியாணி பிரியர்கள் நூற்றுக் கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிக்கன் பிரியாணி சற்று பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால் பலர் சாப்பிட முடியாமல் திணறினர்.
» அம்மா அமைப்பு உதவியாக இருக்காது: நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி பகீர்!
» மாதம் ரூ.8 லட்சம் வரை ஈட்டலாம்... உ.பி. இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு ஜாக்பாட்!
யாராலும் போட்டி இலக்கை எட்ட முடியவில்லை. இருப்பினும், அதிக பிரியாணி சாப்பிட்ட முதல் மூன்று பேருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அதன்படி, கேரளாவை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர் 3 பிளேட் பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசு, கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் இரண்டரை பிளேட் பிரியாணி சாப்பிட்டு 2-ம் பரிசு, மற்றொருவர் 2 பிளேட் பிரியாணி சாப்பிட்டு மூன்றாம் பரிசு பெற்றனர். இவர்களுக்கு கேரள தொழிலதிபர் பாபி செம்மணூர் பரிசுத் தொகையை வழங்கினார்.
ரூ.50 ஆயிரம் பரிசு பெற்ற கணேஷ்குமார் கூறும்போது, “எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம். கோவையில் டாக்சி ஓட்டுநராக பணியாற்றுகிறேன். எனது மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. சிகிச்சைக்காக பணம் நிறைய தேவைப்படுகிறது.
பிரியாணி சாப்பிடும் போட்டி பற்றி கேள்விப்பட்டவுடன், எப்படியும் பரிசுத் தொகையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியில் பங்கேற்றேன். இப்போது, 50 ஆயிரம் ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, “பிரியாணியை அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்திலும், உதவிகள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த போட்டி நடத்தப்பட்டது” என்றனர்.