கோவையில் களை கட்டிய பிரியாணி சாப்பிடும் போட்டி - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

By இல.ராஜகோபால்

கோவை: ஆறு பிளேட் பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலை தொடர்ந்து கோவை ரயில் நிலையம் நுழைவாயில் அருகே அமைந்துள்ள ரயில் பெட்டி உணவகத்தில் இன்று நடந்த போட்டியில் பலர் பங்கேற்றனர்.

‘பிரியாணி’ குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு பெற்ற உணவு வகையாகும். இத்தகைய பிரியாணி பிரியர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் கோவையில் நூதன போட்டி நடத்தப்பட்டது. கோவை ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் ரயில் பெட்டி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் பிரியர்களை கவரும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் பிரியாணி சாப்பிடுவோருக்கான போட்டி இன்று(ஆகஸ்ட் 28 புதன்கிழமை) நடத்தப்பட்டது.

‘போச்சே புட் எக்ஸ்பிரஸ்’ என்ற உணவகத்தில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சம், 4 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50 ஆயிரம், 3 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சிக்கன் பிரியாணி சற்று பெரிய பாத்திரத்தில் வைக்கப்பட்டதால் பலர் சாப்பிட முடியாமல் திணறினர். இப்போட்டியில் பங்கேற்றவர்களில் கணேச மூர்த்தி என்பவர் ஆட்டிசம் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட அவரது மகனுக்கு நிதி கிடைக்க வேண்டி போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது,“பிரியாணியை அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்திலும், உதவிகள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்க இது போன்ற பரிசுத் தொகையுடன் கூடிய போட்டி நடத்தப்படுகிறது” என்றனர். கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பலர் போட்டியில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE