ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த தேசிய நெல் விழாவில் 18 ஆண்டுகளில் 1 லட்சம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டுள்ளது என கிரியேட் அமைப்பின் தலைவர் துரைசிங்கம் தெரிவித்தார்.
கிரியேட் அமைப்பு , ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், குடி மக்கள் நுகர்வோர் சங்கம் மற்றும் கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் ஆகியவை இணைந்து, 18-வது தேசிய நெல் திருவிழாவை இன்று நடத்தின. ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலைக் கல்லூரியின் முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தேசிய நெல் திருவிழா மற்றும் பராம்பரிய உணவுத் திருவிழாவை கல்லூரியின் தாளாளர் ஏ.செல்லதுரை அப்துல்லா தொடங்கி வைத்தார்.
உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க தலைவர் செய்யது இப்ராகீம் உள்ளிட்ட பலர் பேசினர். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர், 150-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கிரியேட் அமைப்பின் தலைவர் பேராசிரியர் பி.துரைசிங்கம் நெல் திருவிழாவின் நோக்கங்கள் குறித்து பேசும்போது,"கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதையை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவர்களின் உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த கல்லூரி கேண்டீனில் ஆர்கானிக் உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று துரைசிங்கம் வேண்டுகோள் விடுத்தார்.
» ‘ஒரு கிராமம் ஒரு பயிர்’ புதிய திட்டம் - பூச்சிகளை தெரிந்துகொள்ள, தெரிந்து ‘கொல்ல’ விழிப்புணர்வு
ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.கண்ணையா சிறப்புரையாற்றும்போது, பாரம்பரிய நெல் சாகுபடியின் நன்மைகளான, களை கட்டுபாடு, பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுபடுத்தும் செயல்திறன், அதன் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்கள், குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் மண் வள மேம்பாடு ஆகியவற்றில் அதன் நேர்மறையான தாக்கம் பற்றி கூறினார். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண்மைத் துறை விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கி வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை வழி வேளாண் வழியில் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் அளிக்கும். விவசாயிகள் அரசின் திட்டங்களை பெற்று பயனடையலாம் என்று கண்ணையா கூறினார்.
விழாவில் பங்கேற்ற 150 விவசாயிகளுக்கு ஆத்தூர் கிச்சலி சம்பா, காலாபாத், குதிரைவால் சம்பா, பூங்கார், சீரக சம்பா, கருங் குருவை, சொர்ண மசூரி, ரத்தசாலி, அறுபதம் குறுவை, வெள்ளைக் கூனி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்று தலா 2 கிலோ வழங்கப்பட்டது.