திருச்சி: மது, போதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் தீமைகளுக்கு எதிராக ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி செப்டம்பர் மாதம் முழுக்க, ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் கருப்பொருளில் பிரச்சார இயக்கம் நடத்துகிறது.
இது குறித்து 'ஒழுக்கமே சுதந்திரம்’ பரப்புரை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், திருச்சி மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் பைரோஸ், பரகத் நிஷா ஆகியோர் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மது, போதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் தீமைகளுக்கு எதிராக ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 30 வரை ஒழுக்கமே சுதந்திரம் எனும் கருப்பொருளில் பரப்புரை நடத்த உள்ளது.
நாட்டில் மது, போதை பெருகி குடி நோயாளிகளின் நாடாக இந்தியா மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண், பெண் வேறுபாடின்றி பெரும்பாலானோர் மது அருந்துகின்றனர். இதனால் தீமைகள் பெருகி, நோய்கள் அதிகரித்துவிட்டன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என அனைத்துத் தீமைகளுக்கும் தாயாக மது இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துவது வேதனையளிக்கிறது. போதை நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதால் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதல்வர் முஸ்டாவின் முன்னெடுத்துள்ளதை தாங்கள் வரவேற்கிறோம்.
ஆகஸ்ட் 11ம் தினத்தை போதைக்கு எதிரான நாளாக அறிவித்து மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி. அதேவேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு பூரண மது விலக்கை கொண்டுவர வேண்டும். இன்று பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவின் மகள்கள் தொடர்ந்து சீரழிக்கப் படுகிறார்கள்.
» திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
» பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முத்திரைத் தாளில் எழுதப்பட்ட ஆவணம் பழநியில் கண்டெடுப்பு
பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாகவும் மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், சிந்தனை மாற்றமே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும்.
மது, போதை, ஆபாசம் ஒழுக்கக் கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை முன்னிட்டு திருச்சியில் செப்டம்பர் 14 அன்று தலைமை தபால் நிலையம் முதல் ரயில்வே ஜங்ஷன் வரை மனித சங்கிலி நிகழ்ச்சி, மேலரண் சாலை தேவர் ஹாலில் அரங்குக் கூட்டம், பொதுக் கூட்டங்கள், தெரு முனைக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள். பெற்றோர்களை சந்திக்கும் நிகழ்வுகள், சமூக வலைதள விழிப்புணர்வு என செப்டம்பர் மாதம் முழுவதும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உள்ளோம். ஒரு மித்த கருத்துள்ள அமைப்புகள் அனைவரும் இந்த நல்ல நோக்கத்துக்காக தங்களுடன் இணைந்து செயல்படலாம்" என்று அவர்கள் கூறினார்.