குட்நியூஸ்... வார விடுமுறையை முன்னிட்டு 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

By காமதேனு

வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் வார விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதனால் அந்த நாட்களில் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில் தற்போது வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 17.02.2024 (சனிக்கிழமை) 18.02.2024 (ஞாயிறு) திங்கட்கிழமை முகூர்த்தம் ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு மற்றும் 16.02.2024 வெள்ளிக்கிழமை அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 750 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருத்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

மேலும் பெங்களூர், கோவை உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 550, பிற இடங்களில் இருந்து 200 என ஆக மொத்தம் 750 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் பற்றாக்குறை உள்ளது என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் வார விடுமுறையை ஒட்டி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டிருப்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE