மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்தில், டிக்கெட் எடுக்காமல் வித்தவுட்டில் பயணித்தவர்களிடமிருந்து கடந்த ஓராண்டில் ரூ.100 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே மும்பை கோட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த ரயில் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை இமயம் தொட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து கடந்த நிதியாண்டில், மும்பை கோட்ட ரயில்வே, 2023 பிப்ரவரி 26-ம் தேதி வரை ரூ.100 கோடி அபராதம் வசூலித்தது.
ஆனால், இந்த நிதியாண்டில் அதற்கும் 13 நாட்கள் முன்னதாகவே ரூ.100 கோடி அபராத வசூலை எட்டியுள்ளது. கடந்த 13-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 100 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரத்து 988 ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது மும்பைக் கோட்ட ரயில்வே. டிக்கெட் அபராதத் தொகை வசூலில் இது ஒரு புதிய மைல் கல்லாகும்.
டிக்கெட் இல்லா பயணம் தொடர்பாக மும்பை சத்ரபதி சிவாஜி மார்க் டெர்மினல் முதன்மை டிக்கெட் பரிசோதகர் சுனில் நைனானி 16,885 வழக்குகள் பதிவு செய்து, ரூ.1.62 கோடி அபராதம் வசூலித்துள்ளார். தலைமை டிக்கெட் பரிசோதகர் எம்.ஷிண்டே, 15,507 வழக்குகளில் ரூ.1.37 கோடியும், டிக்கெட் பரிசோதகர் முகமது ஷாம்ஸ் சந்த், 11,274 வழக்குகளில் ரூ 1.05 கோடியும் அபராதம் வசூலித்துள்ளனர்.
இவர்கள் மூவர் மட்டுமே தலா ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலித்துள்ளனர். இதேபோல், புறநகர் பகுதி ரயில் நிலையங்களிலும் டிக்கெட் இன்றி ரயில் பயணம் மேற்கொண்டவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராத கட்டணங்களையும் சேர்த்து இந்த நிதியாண்டிலும் ரூ.1 கோடிக்கும் மேல் அபராத வசூல் சாதனை படைத்திருக்கிறது முபைக் கோட்ட ரயில்வே நிர்வாகம்.