மீண்டும் எகிறும் வெங்காயம் விலை... இல்லத்தரசிகள் கவலை; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

By காமதேனு

பருவமழைக் காலங்களில் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் அதனை பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.

சின்ன வெங்காயம்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இன்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 முதல் 90 வரை விற்பனையாகிறது. இதேபோல சின்ன வெங்காயம் கிலோ ரூ.120 முதல் 130 ரூபாயை வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை இரட்டை சதம் அடித்த நிலையில், இந்த மாதம் வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பெரியகருப்பன்

இந்த நிலையில், வெங்காயத்தின் விலை கட்டுப்படுத்தும் வகையில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில் அண்டை மாநிலங்களில் மழையின் தாக்கம் குறைந்து வருவதால், வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை தானாக குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE