மூளைச்சாவு அடைந்த சேலம் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

By வி.சீனிவாசன்

சேலம்: சேலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞரின் உடலுக்கு அரசு மருத்துவமனை டீன் மணி தலைமையிலான அரசு அலுவலர்கள் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே ரங்கனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் சந்திரசேகர் (50). இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் பிரசாந்த் (22) பிகாம் (சிஏ) படித்துவிட்டு அரசு வேலைக்காக குரூப் - 4 தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் , கடந்த 18-ம் தேதி இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று திரும்பும் வழியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பிரசாந்த் படுகாயம் அடைந்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனால், அவரது உடல் உறுப்புகளை தானமாக பிறருக்கு வழங்கிட வேண்டி மருத்துவ குழுவினர், அவரது பெற்றோரை அணுகினர்.

பிறரின் வாழ்க்கைப் பயணம் தொடர, தனது மகன் உதவிட முடியும் என்பதை உணர்ந்த அவரது பெற்றோர், பிரசாந்த்தின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிட முன்வந்தனர். இதன் பின்னர், மருத்துவக் குழுவினர் பிரசாந்தின் கண், இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக எடுத்தனர்.

இதனையடுத்து, இன்று காலை சேலம் அரசு மருத்துவமனையில் பிரசாந்தின் உடலுக்கு சேலம் அரசு மருத்துவமனை டீன் மணி தலைமையில், மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் பிரசாந்தின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து, அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினர். சேலம் அரசு மருத்துவமனையில் நடப்பாண்டு பிரசாந்த் உள்பட 8 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE