தொட்டபெட்டா சிகரம் செல்ல மீண்டும் அனுமதி - குவியும் சுற்றுலாப் பயணிகள்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: தொட்டபெட்டா சிகரம் செல்ல 5 நாட்களுக்கு பின்னர் வனத்துறை அனுமதித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் தொட்டபெட்டா காட்சி முனையும் ஒன்று. கடல் மட்டத்திலிருந்து 2,673 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த காட்சி முனையை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உதகை கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா காட்சி முனை பிரிவு சாலையில் இருந்த நுழைவு கட்டண மையத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து அந்த நுழைவு கட்டண மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறை முடிவு செய்து அதற்கான பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதனையடுத்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் 15 நாட்கள் தொட்டபெட்டா காட்சி முனை மூடப்பட்டது. கட்டண மையத்தை மாற்றும் பணிகள் நிறைவடையாத நிலையில், மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வரும் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் செலுத்துவதற்காக தானியங்கி நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதையடுத்து கடந்த 20ம் தேதி காலை முதல் நேற்று வரை காட்சி முனைக்கு செல்லும் வழி மூடப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி நேற்றைக்குள்ளும் பணிகள் முடிவடையவில்லை. இருந்த போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

ஐந்து நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட, தொட்டபெட்டா காட்சி முனையை காண தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உட்பட்ட வெளி மாநில சுற்றுலாப் பணிகளும் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். இங்கு நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்கும் அவர்கள் தொட்டபெட்டா மலைச் சிகரத்திலிருந்து குன்னூர் பள்ளத்தாக்கு, உதகை நகரம், தேயிலை தோட்டம் ஆகியவற்றின் அழகை கண்டு ரசித்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்கின்றனர்.

இதனிடையே தொட்டபெட்டா காட்சி முனை சாலையில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் பாஸ்ட் டேக் கட்டண மைய பணிகளை விரைந்து முடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE