பிரபல காட்பரீஸ் நிறுவனத்தின் ‘டெய்ரி மில்க் சாக்லேட்’டில் உயிருடன் நெளியும் புழு கண்டெடுக்கப்பட்ட சம்பவம், சாக்லேட் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாக்லேட் ருசியை விரும்பாதவர்கள் குறைவு. சகல வயதினரையும் ஈர்க்கும் சாக்லேட், ஆரோக்கிய அனுகூலங்களையும் தரக்கூடியது. இதனால் குழந்தைகள் மட்டுமன்றி அனைத்து வயதினரும் சாக்லேட்டை ருசிக்கிறார்கள். அவர்களுக்காக விதம்விதமான சாக்லேட்டுகள் சந்தையில் புழங்குகின்றன.
இந்த சாக்லேட்டுகள் ஆரோக்கிய கேடாக மாறுவது மற்றும் புழுக்கள் நெளிவதை, சாக்லேட் பிரியர்களால் சகித்துக்கொள்ள முடியாதது. ஆனால் அப்படியான மோசமான அனுபவம் ஹைதாராபாத்தை சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவருக்கு வாய்த்திருக்கிறது. பிரபல காட்பரீஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டெய்ரி மில்க் சாக்லேட்டை அவர் கடையில் வாங்கி வந்தவர், அவற்றை ருசிப்பதற்காக திறந்தபோது அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
அந்த சாக்லேட்டில் உயிருடன் நெளியும் புழுக்களைக் கண்டதும் பதறிப்போனார். பிரபல நிறுவனத்தின் தயாரிப்பை நம்பிக்கையோடு வாங்கியும் தான் ஏமாந்ததாக உணர்ந்தார். இதே போன்று புழுக்கள் நெளியும் சாக்லேட்டுகளை உண்ணத் தலைப்படும் குழந்தைகளையும் அவர் யோசித்துப் பார்த்தார். உடனடியாக சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் தனது கசப்பான அனுபவத்தை அவர் பதிவாக வெளியிட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தின் தானியங்கி ஒன்றில் வாங்கிய அந்த சாக்லேட்டில் உயிருடன் புழு தென்பட்டதை வீடியோவாக பதிவிட்டார். உடன் சாக்லேட் வாங்கியதற்கான பில்லையும் இணைத்தார். "இன்று அமீர்பேட் மெட்ரோவில் வாங்கிய காட்பரி சாக்லேட்டில் ஒரு புழு ஊர்ந்து கொண்டிருந்தது. காலாவதியாகும் இந்த தயாரிப்புகளுக்கு தர சோதனை உள்ளதா? பொது சுகாதார கேடுகளுக்கு யார் பொறுப்பு?" என்று அந்த பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
ராபின் சாக்கியஸ் வெளியிட்ட பதிவு உடனடியாக ட்விட்டரில் வைரலானது. லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதில், பலரும் உணவுப்பொருள் சந்தையில் தங்களது கசப்பான அனுபவங்களை பதிவிடத் தொடங்கினர். மேலும் கேட்பரீஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் குறைகளைத் தெரிவிப்பது முதல் இழப்பீடு பெறுவதற்கான சட்டப்பூர்வ வழிகளை ஆராய்வது வரை பலரும் பரிந்துரைகளை தொடர்ந்தனர். சாக்லேட்டை சுற்றி இரட்டை அடுக்கு பாதுகாப்பு இல்லாததே புழு பாதிப்புக்கு காரணம் என்ற ஒருவரின் பதில், மற்றவர் மத்தியில் வரவேற்பு பெற்றது.
இந்த வைரல் பதிவுக்கு பதிலளித்த ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன், பொது இடங்களில் குறைபாட்டுடன் விற்கப்படும் சாக்லேட்டுகள் தொடர்பான விரைவான நடவடிக்கைக்கு உறுதியளித்தது. மெலும், டெய்ரி மில்க் சாக்லெட்டுகளை தயாரிக்கும் காட்பரீஸ் நிறுவனம், தங்கள் தரப்பு குறையை ஒப்புக்கொண்டதுடன், அதில் விசாரணையை எளிதாக்குவதற்கான கூடுதல் விவரங்களையும் கோரி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முடிவாகிறது தொகுதிகளின் எண்ணிக்கை... மூன்று கட்சிகளுடன் திமுக பேச்சு!
தமிழகத்தில் எமர்ஜென்சியா...? பகீர் கிளப்பிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா!
வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!
அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்... பஞ்சாப் முதல்வருடன் ராமர் கோயிலில் வழிபாடு!