‘காடுகளின் பாதுகாவலன்’ எங்களின் குலதெய்வம் - யானைகள் குறித்து பழங்குடியினர் பெருமிதம்!

By ஆர்.டி.சிவசங்கர்

முதுமலை: ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. மற்ற விலங்குகளை காட்டிலும் யானைகள் மாறுபட்டவை. அனைவராலும் நேசிக்கப்படும் பெரிய விலங்கு யானை. பெரிய கால்கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், 'மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை.

இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தனிக்கூட்டமாக வாழும். வயதான பெண் யானைதான் மற்ற யானைகளுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கக்கூடியவை.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின்தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில்படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.

இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகின்றன. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. யானைகள் குறித்து மக்களிடம் பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர் யானைகளை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 7 பண்டைய பழங்குடியினர் வசிக்கின்றனர்.

குன்னூர் தாலுகா சேமக்கரை, ஆனைப்பள்ளம், செங்கல்புதூர், சின்னாளகொம்பை ஆகிய பகுதிகளில் குரும்பர் இன பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். கோத்தகிரி கொணவக்கரை ஊராட்சிக்குட்பட்ட கோங்காட்டுபுதூர் பகுதியில் இருளர் பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள்அடர்ந்த வனத்தை ஒட்டிய பகுதிகளிலேயே காலம் காலமாக வசிக்கின்றனர். ஆனாலும், அங்குள்ள காட்டுயானைகள் இவர்களை ஒன்றும் செய்வதில்லை என்கின்றனர்.

இதுகுறித்து கோங்காட்டுபுதூரை சேர்ந்த ராமசாமி கூறும்போது, "எங்களது பண்டைய கால வரலாற்றின்படி, யானைகளை குலதெய்வ மாக கருதி வழிபடுகிறோம். அவை எங்களை தாக்காது என சொல்கின்றனர். ஆனால், எங்கள் சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே எதேச்சையாக தாக்கப்பட்டு இறந்துள்ளனர். மற்றபடி அன்றாடம் நாங்கள் யானைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம்" என்றார்.

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கோலாகலமாக
கொண்டாடப்பட்ட சந்தோஷ் என்ற யானையின் பிறந்தநாள்.

சந்தோஷின் பிறந்தநாள் கொண்டாட்டம்: முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் முகாம்களில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமில் மறைந்தருக்கு என்ற வளர்ப்பு யானைக்கு, 1971 ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்தது சந்தோஷ் என்ற யானை. இந்தாண்டு 53-வது வயதை பூர்த்தி செய்தது சந்தோஷ். சுதந்திர தினத்துடன் சந்தோஷின் பிறந்தநாளை வனத்துறையினர் கோலாகலமாக கொண்டாடினர்.

இதற்காக, யானை விரும்பி உண்ணக்கூடிய கேழ்வரகுடன், தேங்காய் இனிப்பு சேர்த்து செய்யப்பட்ட கேக்கை, பாகன் மாறன், வனக் காப்பாளர் கோபால் ஆகியோர் வெட்டினர். முதுமலை துணை இயக்குநர் (பொ) வெங்கடேஷ் பிரபு, யானைக்கு கேக் ஊட்டினார்.

பாகன்கள் கூறும்போது, "சுதந்திர தினத்தில் பிறந்த வளர்ப்பு யானை சந்தோஷ், சுதந்திர தின நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடியது மறக்க முடியாத நிகழ்வாகும்" என்றனர். முதுமலை முகாமில் 5 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட தந்தத்தால் பாரம் தாங்காமல் யானை சந்தோஷ் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து, 2 அடி அளவுக்கு தந்தத்தை வனத்துறையினர் வெட்டிவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE