மரத்தடியில் 3 மகள்களுடன் தவித்த தொழிலாளிக்கு வீடு - தன்னார்வ அமைப்பு ஏற்பாடு

By KU BUREAU

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கஜா புயலில் வீடு சேதமடைந்து, மரத்தடியில் 3 மகள்களுடன் தவித்து வந்த தொழிலாளிக்கு, தன்னார்வ அமைப்பு வீடு கட்டித் தர முன்வந்துள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாளூர் தெற்கு ஊராட்சி கிழக்குக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெ.செல்வராஜ். இவருக்கு 3 மகள்கள். 2018-ல் கஜா புயலின்போது இவர்கள் வசித்து வந்த கூரை வீடு முழுமையாக சேதமடைந்தது. ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக செல்வராஜால் புதிய வீடு கட்ட முடியவில்லை. இதனால், அங்கேயே மரத்தடியில் மகள்களுடன் தவித்து வந்தார் செல்வராஜ்.

இதுகுறித்து அறிந்த குளமங்கலம் பாரத பறவைகள் என்ற அமைப்பினர், செல்வராஜ் குடும்பத்தினருக்கு எளிய வீடு கட்டிக் கொடுக்க முன்வந்தனர். இதற்காக நேற்று நடைபெற்ற பூமி பூஜையில் அந்த அமைப்பின் தலைவர் அறிவழகன், செயலாளர் ரவிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாரத பறவைகள் அமைப்பினர் கூறியது: கஜா புயலுக்குப் பிறகு இதுவரை 11 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். இதுமட்டுமின்றி நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம்.

இதன் தொடர்ச்சியாக தற்போது செல்வராஜுக்கு, 18 அடி நீளம், 10 அடி அகலத்தில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை, மின் இணைப்பு ஆகிய வசதியுடன் வீடு கட்டித் தர உள்ளோம் என்றார். இந்த உதவியால் கடந்த 6 ஆண்டுகளாக வீடின்றி மரத்தடியில் தவித்து வந்த செல்வராஜ் குடும்பத்தினர், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE