உளி தாங்கும் கற்கள் தானே - சிதம்பரத்தில் கவனம் ஈர்த்த தன்னம்பிக்கை நாயகன்!

By க. ரமேஷ்

முதுகலை ஆசிரியரான பார்வையற்ற மாற்றுத் திறனாளி ராஜ்குமார் என்பவர், சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களிடையே நம்பிக்கை உரையாற்றியிருக்கிறார்.

அவரது தன்னம்பிக்கையான பேச்சு, அவரைப் பற்றி அறியும் ஆவலை நமக்குள் ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பாதரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜீவானந்தம் - லதா தம்பதியினர். இவர்களது மகன் ராஜ்குமார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், தனது பெரியப்பா பாலசுப்பிரமணியன் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்.

மயிலாடுதுறை தேசிய பள்ளியில் மாற்றுத் திறனாளி சிறப்புப் பிரிவில் தொடக்கக்கல்வி பயின்று, அங்குள்ள புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று, சொல்வதை எழுதும் ஆசிரியர் உதவியுடன் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 500-க்கு 411 மதிப்பெண்கள் பெற்று, நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுள் முதலிடம் பெற்றார்.

இந்தச் சாதனையை எட்டியதால் நாகை மாவட்ட ஆட்சியர் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார். மேல்நிலைப் படிப்பைத் தொடர சிதம்பரம் வந்த ராஜ்குமார் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பில் சேர்ந்து, சிதம்பரத்தில் உள்ள சிசிடபிள்யு (CCW) மாற்றுத்திறனாளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இசையில் ஆர்வமுள்ள ராஜ்குமார் மாநில அளவில் சென்னையில் நடந்த பாட்டுப்போட்டியில் பங்கேற்று முதலிடம் வகித்து ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு, கேடயம் ஆகியவற்றைப் பெற்று சாதனை படைத்தார். மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசுப் பொதுத் தேர்வில் 1200-க்கு 1030 மதிப்பெண்களுடன், குறிப்பாக வணிகவியல் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.

தொடர்ந்து மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் இளங்கலை வரலாறு பட்டப் படிப்பில் கல்லூரியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். ஆசிரியராகி கல்விப் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியக் கனவுடன் சென்னை சைதாப்பேட்டை அரசுக் கல்லூரியில் படித்து, இளங்கலை கல்வியியல் பட்டப் படிப்பில் முதலிடம் பெற்றார்.

ராஜ்குமார்.

தனது சாதனையின் தொடர்ச்சியாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் முதலிடம் பெற்ற 332 மணவர்கள் பங்கேற்ற போட்டித்தேர்வில் 200-க்கு 162 மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் முதுகலை வரலாறு படிப்பில் சேர்ந்து படித்து பல்கலைக் கழக அளவில் முதலிடம் பெற்றார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்டோர் முன்னிலையில் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கு நடைபெற்ற போட்டித் தேர்வில் 150-க்கு 105 மதிப்பெண்கள் பெற்றுத் தமிழக அளவில் 13 வது இடம் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப் பட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வரலாறு ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்று, மயிலாடுதுறை மாவட்டம் ஆனந்த தாண்டவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணி மாறுதல் பெற்று பணியாற்றி வருகிறார்.

படிப்படியான தமது முன்னேற்றம் குறித்து பேசிய ராஜ்குமார், "ரணங்கள் இல்லாமல் இல்லை; வலிகளைத் தாண்டியே, குறைகளைத் தாண்டியே வெற்றி இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.

எனது கல்வி வளர்ச்சிக்கு எனது பெரியப்பா பாலசுப்ர மணியன், சகோதரி பரிமளா, மாமா செங்கண்ணன், ஆசிரியர்கள் சாந்தா, சபரிராஜன், நிருபா, வசந்தி மற்றும் எண்ணற்ற நண்பர்கள் பேருதவி புரிந்துள்ளனர். குறிப்பாக எனது மாமா செங்கண்ணன் மற்றும் நண்பர்கள் தூண்களாக இருந்து என்னைத் தாங்கி பிடித்தனர். அவர்களைப் பற்றி குறிப்பிட வார்த்தைகளே இல்லை.

சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள், தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாணவ நண்பர்கள் படிப்புடன் இசை உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ள என்னை உற்சாகமூட்டியது என் வாழ்வில் குறிப்பிடத்தக்க ஒன்று.

என்னைப் போல் ஒவ்வொரு மாணவரும் ஒரு குறிக்கோளுடன் படித்து, தாங்கள் தேர்ந்தெடுத்தவற்றில் முன்னேறி, தங்கள் பெற்றோருக்கும் நம் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE