கொடைக்கானலில் களைகட்டிய கோடை விழா - சுற்றுலா பயணிகளை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்

By KU BUREAU

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மலர் கண்காட்சியையொட்டி நடவு செய்யப்பட்ட 15 வகையான 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பூத்து குலுங்குகின்றன. பூக்களை பார்த்து ரசித்தும், பூக்களின் பின்னணியில் நின்று செல்ஃபி எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். கோடை விழாவையொட்டி சுற்றுலாத் துறை சார்பில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடந்த பரதநாட்டியம், மேஜிக் ஷோ, ஜிம்னாஸ்டிக் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. கலை நிகழ்ச்சியின் போது சுற்றுலா பயணிகளும் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் மலர் கண்காட்சி நடக்கும் பிரையன்ட் பூங்கா மட்டுமின்றி குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கனமழை காரணமாக, நேற்று நடைபெற இருந்த படகு போட்டி, மே 25-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியினருக்கு என தனித் தனியே படகு போட்டி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் போட்டியன்று தங்கள் பெயரை பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். இதே போல், இன்று (மே 22) நாய்கள் கண்காட்சி, நாளை (மே 23) படகு அலங்கார போட்டி, மே 24-ல் மீன் பிடித்தல் போட்டி நடைபெற உள்ளது என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE