அடுத்த அதிர்ச்சி... வெங்காயத்தில் ஒளிந்திருக்கும் பாக்டீரியாவால் அமெரிக்காவில் புதிய பீதி!

By காமதேனு

பாக்டீரியா தொற்றிய வெங்காயத்தை உண்பதால் உண்டாகும் புதுவித பாதிப்புகள் பல்வேறு மாகாணங்களிலும் பரவியதை அடுத்து, அந்த மாகாணங்களில் அமெரிக்கா சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது.

சால்மோனெல்லா பாக்டீரியா ஒளிந்திருக்கும் வெங்காயத்தை உண்பதால், வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு வரையிலான பாதிப்புகள் வரக்கூடும். அமெரிக்க மாகாணங்களில் இந்த பாக்டீரியா தொற்றிய வெங்காயத்தை உண்டதால் நூற்றுக்கும் மேலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்ப்பலிகள் ஏதும் இல்லாதபோதும், மக்கள் மத்தியில் பாக்டீரிய தொற்றிய வெங்காயம் தொடர்பாக அச்சம் எழுந்துள்ளது.

கில்ஸ் ஆனியன்

கில்ஸ் ஆனியன்ஸ் என்ற நிறுவனம் வெங்காய ரகங்களை நறுக்கியும், அவற்றை செலரி மற்றும் கேரட்டுடன் கலவையாகவும் பேக் செய்தும் சந்தையில் விற்று வருகிறது. சால்மோனெல்லா எச்சரிக்கையை அடுத்து, தனது வெங்காய பாக்கெட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக கில்ஸ் ஆனியன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின்படி, நறுக்கி விற்பனைக்கு வரும் வெங்காயத்தில் சால்மோனெல்லா பாக்டீரியா கணிசமாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உணவை சுமார் 150 பாரன்ஹீட் வெப்பத்தில் சூடாக்கும்போது சால்மோனெல்லா பாக்டீரியா செயலிழந்துவிடும். அவ்வாறு முழுதுமாக சமைக்காத மற்றும் முறையாக வேகாத வெங்காயத்தால் சால்மோனெல்லா பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

கில்ஸ் ஆனியன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனைப்பொருட்களை திரும்பப்பெறுவதுடன், அமெரிக்கர்கள் தங்களது ஃபிரிட்ஜ் சேமிப்பில் இருக்கும் வெங்காயத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அமெரிக்காவின் மாகாணங்களுக்கு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE