விஜயா வாசகர் வட்டம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு கி.ரா விருது அறிவிப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: விஜயா வாசகர் வட்டத்தின் சார்பில், எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு கி.ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கரிசல் இலக்கியத்தின் நாயகன் கி.ரா எனப்படும் கி.ராஜநாராயணன் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். கரிசல் வட்டார அகராதியை தமிழ் உலகுக்கு தந்த முன்னோடி. சாகித்ய அகாடமி விருதுக்கு பெருமை சேர்த்தவர். கி.ராவின் நினைவை போற்றும் வகையில் கோவை விஜயா பதிப்பகத்தின் "விஜயா வாசகர் வட்டம்" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்பாளிகளுக்கு கி.ரா விருது வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.5 லட்சம் பரிசுத் தொகை மற்றும் கேடயம் வழங்கப்படுகிறது. இந்த விருதினை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி கவுரவிக்கிறது. நடப்பு 2024ம் வருடத்துக்கான கி.ரா விருதுக்கு பிரபல எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் இதற்கான விருதளிப்பு விழாவில், புதுடெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நாஞ்சில் நாடனுக்கு கி.ரா விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பள்ளிப்படிப்பு காலத்தில் இருந்தே, வாசிப்பு, எழுத்து, இசை என ஈடுபட்ட வாழ்க்கை. தலைக்கீழ் விகிதங்கள், சதுரங்கக் குதிரை மாமிசப்படைப்பு, எட்டுத்திக்கும் மத யானை உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களுடன், கவிதை, சிறுகதை, கட்டுரை என நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் சிறந்த நாவல் விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, அமுதன் அடிகள் விருது, கனடா நாட்டு இயல் விருது, ஆஸ்திரேலியா நாட்டு மெல்பர்ன் தமிழ்ச்சங்க இயற்றமிழ் விருது, உலகத் தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய பெரியசாமி தூரன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பரிசுகளை இலக்கியப் பணிக்காக இவர் வென்றுள்ளார். கோவையில் நடைபெற உள்ள கி.ரா விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். கடந்தாண்டுகளில் கி.ரா விருதினை, எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம், எஸ்.வி.ராஜதுரை பெற்றுள்ளனர்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE