மத்திய பட்ஜெட்டில் மகத்தான அறிவிப்பு; கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு சுதேசி தடுப்பூசி

By காமதேனு

இன்று தாக்கலான மத்திய இடைக்கால பட்ஜெட்டின் முத்தாய்ப்பான அறிவிப்புகளில், பதின்ம வயது பெண்களுக்கான கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய்க்கான தடுப்பூசி கவனம் பெற்றுள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது உலகளவில் பெண்களை அச்சுறுத்தும் புற்று நோய்களின் ஒன்றாகும். இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. உலகப் பெண்களில் சுமார் 16 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். ஆனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை பொறுத்தளவில், அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் நான்கில் ஒரு பகுதியினர் இந்தியாவில் உள்ளனர். மேலும் உலகளாவிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியப் பெண்களை பீடிக்கிறது.

புற்றுநோய் விழிப்புணர்வு

இந்தியப் பெண்களில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் சரிபாதிக்கும் மேலானவர்கள் இறக்கவும் நேர்கிறார்கள். மார்பகப் புற்று நோய்க்கு அடுத்தபடியாக பெண்களை அதிகம் பலிகொள்ளும், இந்த கர்ப்பப்பை வாய்ப் புற்று நோயின் பாதிப்பை தடுக்க, இந்தியாவிலேயே தயாரான தடுப்பூசியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதன் மூலம் தடுப்பூசியின் விலை பெருமளவு குறைய வாய்ப்பாகும்.

இந்த ஹெச்பிவி தடுப்பூசி, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு போடுவது அவசியம் என்பதால், பள்ளிகள் வாயிலாக அவற்றை செயல்படுத்தும் யோசனையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத்திய அரசு பரிசீலித்து வந்தது. இதன் பொருட்டான நாடு தழுவிய நோய்த்தடுப்பு இயக்கத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆணையம், உள்நாட்டு ஹெச்பிவி தடுப்பூசியை தயாரிப்பதற்கான அங்கீகாரத்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு 2022-ல் வழங்கியது.

இதனையடுத்து பள்ளி மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 முதல் 10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளை கணக்கிடுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. பள்ளிகளில் தடுப்பூசி போடுவதற்காக ஹெச்பிவி தடுப்பூசி மையங்கள் அமைக்கவும், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சிறுமிக்கு ஹெச்பிவி தடுப்பூசி

இந்த ஏற்பாடுகள் தற்போதைய இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு வாயிலாக கனிந்து வந்துள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின்போது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை அரசு ஊக்குவிக்கும் என அறிவித்துள்ளார். மானிய அடிப்படையிலா அல்லது இலவசமாகவா என்ற மேலதிக விவரங்கள் இனிமேல்தான் தெரிய வரும்.

தற்போது, ​​சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக செர்வாவாக் என்ற பெயரிலான தடுப்பூசி, சுதேசி தயாரிப்பாக கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனையின் பேரில் ஒரு டோஸ் ரூ. 2,000க்கு இதனை போட்டுக்கொள்ளலாம். இதுவே வெளிநாட்டுத் தயாரிப்பிலான ஹெச்பிவி தடுப்பூசி ரூ3,927 என்ற விலையிலும் இந்தியாவில் கிடைக்கிறது. இந்த விலை அதிகமான தடுப்பூசி சகலமானோர்களுக்கும் கிடைக்கும்போது, இந்திய பெண்களை கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் அரக்கனிடமிருந்து காப்பாற்றுவதும் சாத்தியமாகும்.

இதையும் வாசிக்கலாமே...

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு!

வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை; 3 நாட்கள் விடுமுறை... ஜெர்மனியில் இன்று முதல் புதிய திட்டம்!

ஜனாதிபதி உரை பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை: திருமாவளவன் கண்டனம்!

அதிமுக ஆட்சியில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம்: 3 கட்டுமான நிறுவனங்களில் அதிரடி ரெய்டு!

ரோட்டர்டம் சர்வதேச படவிழா; ‘விடுதலை’ படத்திற்கு எழுந்து நின்று கை தட்டி வரவேற்பு... உற்சாகத்தில் படக்குழு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE