திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் செண்டுமல்லிப் பூக்கள் விளைச்சல் அதிகரித்து பூத்துக்குலுங்கும் நிலையில், விலை வெகுவாக குறைந்ததால் பயிரிட்ட விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
திண்டுக்கல், நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு பூக்கள் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவர திண்டுக்கல், நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்கள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கல்லுப்பட்டி, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் செண்டுமல்லிப் பூக்களை அதிகம் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த மாதம் வரை பூச்செடிகளுக்கு பாதிப்பு இன்றி சீரான மழை பெய்ததால் செண்டுமல்லிப் பூக்கள் விளைச்சல் அதிகரித்து பூத்துக் குலுங்குகின்றன. வழக்கமாக இந்த சீசனில் தேவை அதிகரிக்கும் என்பதால் நல்ல விலை கிடைக்கும். இதை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லிப் பூ கடந்த மாதம் வரை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது.
இதன் காரணமாக செண்டு மல்லிப்பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பயிரிட்ட செலவு, பூக்களை பறிக்கும் செலவு, மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் செலவு, வியாபாரிகள் கமிஷன் என மொத்த செலவு, வருவாயை விட அதிகம் ஆகிறது என்று பூ வியாபாரிகள் கூறினர். வரும் நாட்களில் மழை தொடரும் என்பதால் பூச்செடிகளும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.