தமிழகத்தின் ‘ஹெல்த்வாக் சிஸ்டம்’ மாரடைப்பை தடுக்கும்... அமைச்சர் மா.சு உறுதி!

By காமதேனு

நவ.4 அன்று தமிழகத்தில் தொடங்கவுள்ள ’ஹெல்த்வாக் சிஸ்டம்’, மாரடைப்புக்கான வாய்ப்புகளை தடுக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன்.

அதிகரிக்கும் மாரடைப்பு அபாயங்கள் குறித்தான கவலை பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸ் வரை எதிரொலித்திருக்கிறது. அந்தளவுக்கு இளம்வயதினரும் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. வாழ்வியல் நடைமுறைகளில் புகுந்த மாற்றங்களே, இந்த இளம் வயது மாரடைப்புக்கான காரணம் என்பதை உணர்ந்த தமிழக அரசு, ’ஹெல்த்வாக் சிஸ்டம்’ என்ற பெயரில் ’ஆரோக்கிய நடைப்பயிற்சி’ நடைமுறையை மாவட்டம் தோறும் அமல்படுத்த தயாராகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஏப்ரல் மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதன்படி மாவட்டம் தோறும் நடைப்பயிற்சிக்கு என பிரத்யேகமாக பல கிமீ நீளத்தில் ஆரோக்கிய நடைப்பயிற்சி தெருக்கள் அமைக்கப்பட இருக்கின்றன. நடைப்பயிற்சி செல்லும் நடைபாதை நெடுக இருபுறமும் மரங்கள் நட்டு நிழல் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாரத்தில் ஒரு நாள் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர் குழு அங்கே முகாமிடவும், அவசியமானவர்கள் தங்கள் தேகநலன் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவும் இந்த திட்டத்தில் வழி செய்யப்பட உள்ளது.

நடைப்பயிற்சிக்கான விழிப்புணர்வை அதிகப்படுத்த இப்படி அரசே முன்வந்து அறிவிப்பதன் பின்னணியில், நடைப்பயிற்சி தரும் அடிப்படையான ஆரோக்கிய நலன்களும் இன்னபிற பலாபலன்களும் பொதிந்திருக்கின்றன. அதிலும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பாக அபாயகரமாக அதிகரித்து வரும் இளம்வயது மரணங்களை தடுப்பதற்கு அரசின் இந்த சீரிய ஏற்பாடு உதவக்கூடும்.

நடைப்பயிற்சி

இதன் அடிப்படையில் தமிழகத்தில் நவ.4 அன்று தொடங்கப்பட உள்ள ஹெல்த்வாக் சிஸ்டம், மாரடைப்பு அபாயங்களை குறைப்பதுடன் ஒட்டுமொத்தமாக உடல்நலன் குறித்தான விழிப்புணர்வையும் மக்கள் மனதில் சேர்க்க உதவும். இந்த விழிப்புணர்வு காரணமாக மக்கள் மத்தியில் உடற்பயிற்சி தொடர்பான ஆர்வம் அதிகரிக்கையில், மாரடைப்பு மட்டுமன்றி வாழ்வியல் நோய்கள் பலவற்றையும் திடமாக எதிர்கொண்டு ஆரோக்கிய மீட்க முடியும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE