ராமேசுவரம் | கடலில் பிளாஸ்டிக் மாசு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீனவர்களுக்கு பயிற்சி பட்டறை

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: கடலில் பிளாஸ்டிக் மாசு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மீனவர்களுக்கான பயிற்சி பட்டறை எம்.எஸ்.சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் சார்பாக பாம்பனில் நடைபெற்றது.

பாம்பனில் உள்ள அன்னை கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி பட்டறையை தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் ஜேசுராஜா துவக்கி வைத்தார். ராமேசுவரம் மீன் வளத்துறை ஆய்வாளர் கார்த்திக் ராஜா வரவேற்புரை ஆற்றினார். மதிமுக மீனவர் அணி மாநில செயலாளர் பேட்ரிக், மீனவப் பிரதிநிதிகள் ராயப்பன், முடியப்பன், விஜின், ஜெயபிரகாசம். சகாயம், எமிரிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எம்.எஸ் சுவாமிநாதன் மீன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் வேல்விழி, கடல் சுற்றுச் சூழலில் பேய் வலைகளின் (கைவிடப்பட்ட வலைகள்) விளைவுகள், அதன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விளக்கினார்.

பாம்பனில் நடைபெற்ற மீனவர்களுக்கான பயிற்சி பட்டறை

இந்திய மீன் வள அளவை தளம் திட்ட ஆராய்ச்சியாளர் யோசுவா, "கடல் சுற்றுச்சூழல் அமைப்பில் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் விளைவுகளால், கடல்வாழ் உயிரினங்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்திலும் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்பது குறித்து விளக்கம் அளித்தார். இந்த பட்டறையில் பாம்பன் பகுதியை சேர்ந்த திரளான மீனவர்கள், பெண்கள், விசைப் படகு நாட்டுப் படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE