திண்டுக்கல்லில் கோயில் விழாவுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை - மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு!

By KU BUREAU

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோயில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் பெண் வீட்டு சீதனமாக இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர்.

திண்டுக்கல் நகர் ரவுண்டு ரோடு புதூரில் உள்ள சக்தி சந்தானகணேசர், பரமேஸ்வரி உடனுறை பரமேஸ்வர், பாலமுருகன், விஷ்ணுதுர்க்கை, தட்சிணா மூர்த்தி மற்றும் பரிவாரத் தெய்வங்கள் வீற்றிருக்கும் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. நேற்று காலை வருடாபிஷேக ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கடக லக்னத்தில் பரமேஸ்வரி அம்பிகா சமேத பரமேஸ்வரர் சுவாமிக்கு, பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முன்னதாக, ரவுண்ட்ரோடு பகுதி இஸ்லாமியர்கள் சார்பில், பெண் வீட்டு சீர்வரிசையாக பூமாலை, வளையல், பட்டுச் சேலை, பழங்கள் உள்ளிட்ட 21 வகையான சீர்வரிசைகளை தட்டுகளில் வைத்து கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிகழ்வில், ரவுண்ட் ரோடு புதூர் ஜும்மா மஸ்ஜித் பள்ளி வாசல் தலைவர் இஸ்மாயில், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் முகமது ஹவுஸ், 18-வது வார்டு கவுன்சிலர் முகமது சித்திக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE