வண்டலூரில் தடுத்து நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகள்... தென் மாவட்ட பயணிகள் கடும் அவதி!

By காமதேனு

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகள் தற்போது கோயம்பேட்டிற்கு செல்ல முடியாத வகையில் வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்டு வருவதால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

சென்னை மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆம்னி பேருந்துகள்

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அரசின் உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தைப்பூசம், குடியரசு தினத்தை ஒட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் மற்றும் சுற்றுவட்டார கோயில்களுக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.

ஆனால் நேற்று முதல் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க போக்குவரத்துக் கழகம் தரப்பில் அனுமதி வழங்கவில்லை. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்நிலையில் மாலை 5 மணி அளவில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளுடன் இயக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆம்னி பேருந்து நிலைய வளாகத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அப்போது போலீஸாருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடுப்புகள் அமைத்து பேருந்து நிலையத்தை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். இரவு 7 மணி அளவில் முன்பதிவு செய்த பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல போலீஸாரும், அதிகாரிகளும் அறிவுறுத்தனர். பயணிகள் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படாததால் குழப்பம் அடைந்தனர்.

ஆட்டோக்கள்

இந்நிலையில் இன்று காலை முதல் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரவிடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கத்திற்கு செல்ல அதிகாரிகளும், போலீஸாரும் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியதால் தற்போது கிளாம்பாக்கத்தில் பயணிகளை ஆம்னி பேருந்துகள் இறக்கிவிட்டு செல்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றில் சென்னைக்கு செல்வதானால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


தைப்பூச ஜோதி தரிசனம்... வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!

பட்ஜெட்டில் பென்ஷன்தாரர்களுக்கு குட் நியூஸ்... புதிய சலுகைகளுக்கு மத்திய அரசு பரிசீலனை!

பிரபல தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

நிதி நெருக்கடியில் தவிக்கும் பிரபல நிறுவனம்.. ₹ 8,245 கோடி இழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE