மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரை பகுதியில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் 3-வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தனர். பறக்கவிடப்பட்ட பல்வேறு விதமான பட்டங்களை அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் ச.அருண்ராஜ் பார்வையிட்டனர்.
பின்னர், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி உலகின் கவனத்தை ஈர்த்ததன் காரணமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், 3-ம் ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் விழா திருவிடந்தை பகுதியில் உள்ள கடற்கரையில் 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சர்வதேச பட்டம் விடும் அணிகளைச் சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் 250-க்கும் மேற்பட்ட வடிவங்களில் பட்டங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்த உள்ளனர்.
இந்த திருவிழாவில், ஜல்லிக்கட்டு விளையாட்டின் சிறப்பைவிளக்கும் வகையில் சிறப்புபட்டத்தை தமிழக குழுவினர் பறக்கவிடுவார்கள். ‘உங்கள்வாழ்க்கையை வண்ணமாக்குங்கள்’ என்பதே இந்த ஆண்டு காத்தாடி திருவிழாவின் மையப்பொருளாகும்.
» பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் தீர்மானம்
» மகளிர் ஆணைய பதவியில் இருந்து விலகியது ஏன்? - குஷ்பு விளக்கம்
மேலும், கடந்தாண்டு 150 பட்டங்கள் பங்கேற்றன. இந்தாண்டு பட்டம் விடுவோர் கூடுதலாக பங்கேற்பதால், பறக்கவிடவுள்ள 250 பட்டங்களுக்குஅதிக இடம் தேவைப்படுவதால், இப்பகுதியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலா,பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சி.சமயமூர்த்தி, சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் ச.கவிதா உட்பட சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.