கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூல்... ரூ.5 லட்சம் பரிசுப் போட்டி அறிவிப்பு!

By காமதேனு

கவிஞர் வைரமுத்துவின் 39வது நூலாக 'மகா கவிதை' என்ற தலைப்பில் புதிய படைப்பு வெளியாக உள்ள நிலையில் அதன் தலைப்பை வைத்து போட்டி ஒன்றை அவர் அறிவித்துள்ளார்.

1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த 'நிழல்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக வைரமுத்து நுழைந்தார். தனது இலக்கிய நயம்மிக்க பாடல்களால் இதுவரை ஏழு தேசிய விருதுகளை வென்றுள்ளார். இது எந்த இந்திய பாடலாசிரியருக்கும் கிடைக்காத கவுரவம் . அவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதுவரை வைரமுத்து தமிழ் மொழியில் கவிதைகள் மற்றும் நாவல்கள் அடங்கிய 38 புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் பல ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ரஷ்யன் மற்றும் நார்வேஜிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் தமிழ்நாட்டில் அதிக விற்பனையான புத்தகங்கள் என்ற சாதனைகளை படைத்துள்ளன.

இதுவரை அவரது படைப்புகள் கிட்டத்தட்ட 3 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. 1991-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் மதுரையில் ஒரே நாளில் அவரது நான்கு நூல்கள் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் கவிஞர் வைரமுத்து 'மகா கவிதை' என்ற பெயரில் புதிதாக புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார். இது தொடர்பாக அறிமுக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத கவிஞர் வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்புக்கு ‘மகா கவிதை’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பும், முகப்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன. கவிஞர் வைரமுத்துவின் 39-ம் படைப்பு இது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை நூல் இதுவாகும். நிலம் - நீர் - தீ - வளி - வெளி எனும் ஐம்பூதங்களையும் ஆராய்ந்து படைத்த கவிதையாக ‘மகா கவிதை’ அறியப்படுகிறது.

மகா கவிதை நூல்

தமிழில் இந்த வகை இலக்கியத்தில் இதற்கு முன் இல்லாத புதுமுயற்சி என்று சொல்லலாம். சூர்யா பதிப்பகம் பதிப்பிக்கும் இந்த நூல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது குறித்து போட்டி ஒன்றை கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

'மகா கவிதை' என்னும் தலைப்பில் உள்ள ஐந்து எழுத்துகளில் 5 வார்த்தைகள் ஒளிந்துள்ளதாகவும் அதை கண்டுபிடிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் அந்த பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும், mahaakavi.vairamuthu.gmail.com என்ற முகவரிக்கு பதிலை அனுப்புமாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE