'ஹே எப்புட்றா'... மூளையில் 3 அங்குல ஊசியுடன் 80 ஆண்டுகளாக வாழும் மூதாட்டி!

By காமதேனு

ரஷ்யாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் 80 ஆண்டுகளாக மூளையில் ஊசியுடனே வாழ்ந்து வந்துள்ளது மருத்துவ உலகில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைக்காக போராடினர். அதன் காரணமாக அவர்கள் தங்கள் குழந்தைகளைக் கொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவ்வாறான ஒரு குடும்பத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண்ணொருவர் சமீபத்தில் உடல் நலப்பிரச்சினைக்காக மருத்துவனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது மூளையில் 3 செ.மீ அளவிலான ஊசி ஒன்று இருந்துள்ளதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரஷ்யாவின் தீவான சகாலின் பகுதியைச் சேர்ந்த அப்பெண்ணுக்கு குழந்தையாக இருக்கும்போதே தலையில் ஊசி குத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனால் அவருக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியம்.

மூளை

அதனைத்தொடர்ந்து அந்த ஊசியை அகற்ற வேண்டாம் என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஏனென்றால், அது அவருக்கு எந்த வலியையும், அதிர்ச்சிகரமான மூளைக் காயத்தையோ, மற்ற பிற அறிகுறிகளையோ இதுநாள் வரை ஏற்படுத்தவில்லை.

மேலும் அறுவை சிகிச்சை செய்தால் அது அவருக்கு அதிக சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, எஞ்சியுள்ள காலத்தையும் அவர் ஊசியுடன் கழித்து விடலாம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE