உலகை அச்சுறுத்தக் காத்திருக்கும் ‘டிசீஸ் எக்ஸ்’; உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் அறிவுறுத்தலால் புதிய பீதி

By காமதேனு

டிசீஸ் எக்ஸ் எனப்படும் அடையாளம் காணப்படாத, தொற்றுப்பரவலுக்கு எதிராக உலக மக்கள் கடந்த சில தினங்களாக பீதியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

உலக சுகாதார அமைப்பு சில தினங்கள் முன்னதாக வெளியிட்ட அச்சுறுத்தும் அறிவுறுத்தலே இந்த பீதியின் பின்னணியில் பொதிந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரலான டாக்டர் டெட்ரோஸ் அதானோம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், ’அடுத்த சில மாதங்களில் வெளிப்படவிருக்கும் புதிய நோய்க்கு எதிராக உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தி இருந்தார். இந்த அபாயகரமான புதிய தொற்று அநேகமாக மே மாதத்திற்குள் தனது இருப்பை வெளிகாட்டும் எனவும் அவர் அவதானித்து இருந்தார்.

டிசீஸ் எக்ஸ்

இதனையடுத்தே உலக நாடுகள் மத்தியில் ’டிசீஸ் எக்ஸ்’ என்பது குறித்த விவாதங்களும் அச்சங்களும் மீண்டும் எழ ஆரம்பித்துள்ளன. அடையாளம் தெரியாத கதிர்வீச்சுக்கு ’எக்ஸ் கதிர்’ எனப் பெயரிட்டதுபோல, அடையாளம் அறியப்படாத நோய்த் தொற்று ஒன்றுக்கு டிசீஸ் எக்ஸ் என பெயரிட்டிருக்கிறார்கள். டிசீஸ் எக்ஸ் குறித்தான அச்சம், கொரோனா காலத்துக்கு முன்பிருந்தே, அதாவது சுமார் 5 வருடங்களுக்கு முன்பிருந்தே உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்தக்கூடிய உயிர்கொல்லி நோய் ஒன்று புறப்படும் என்று கணித்த உலக சுகாதார நிறுவனம் ’டிசீஸ் எக்ஸ்’ என்ற பெயரில் அதனை குறிப்பிட்டு எச்சரித்து வந்தது. குறிப்பிட்ட அந்த நோய் மனிதர்கள் மத்தியில் ஜனித்திருப்பினும், பெரிதாக பரவ வாய்ப்பில்லாது, அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த நோயின் தீவிரத்தையும், அதற்கான எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்க சாத்தியமில்லாததையும் ஒப்பிட்டு அந்த தொற்று நோய்க்கு ’டிசீஸ் எக்ஸ்’ என்று நார்வே நாட்டின் அறிவியல் அறிஞர்கள் பெயரிட்டனர்.

எபோலா, லாசா, சிசிஎச்எப் ஹீமோராஜிக், நிபா, மெஸ், சார்ஸ் என்ற வரிசையில் ’டிசீஸ் எக்ஸ்’ என்பதையும் சேர்த்துள்ளனர். ‘இந்த டிசீஸ் எக்ஸ்’ நோய் சர்வதேச அளவில் எவ்வாறு மிகப்பெரிய கொள்ளை நோயாக உருவெடுக்கும்; மனித இனத்துக்கு எந்தவிதமான பாதிப்பை உண்டு செய்யும் என்பது அதன் பரவல் மற்றும் பாதிப்பின் அடிப்படையில்தான் தெரியவரும்’ என அப்போது உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது.

டாக்டர் டெட்ரோஸ் அதானோம் பதிவு

அதன் பின்னர் ஓராண்டு கழித்தே கொரோனா வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊழித் தாண்டவமாடிய பிறகு ஒடுங்கிப் போனது. இதனால் கொரோனா தலைகாட்டியபோது அதுதான் டிசீஸ் எக்ஸ் நோயாக இருக்கும் என்றெழுந்த கணிப்புகள் அதன் பின்னர் அடங்கிப்போயின. தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் மூலம் இந்த டிசீஸ் எக்ஸ் குறித்தான அச்சம் மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது.

‘இயற்கையான வகையில் விலங்குகள் மத்தியில் பரவிக்கிடக்கும் தொற்று ஏதேனும் மனிதரிடத்து ஊடுருவிப் பரவுதல், தடுப்பூசி உட்பட எதிர்ப்புகள் எதற்கும் அடங்காது மனித உயிர்களை காவு வாங்குதல்’ ஆகியவை டிசீஸ் எக்ஸ் பரவலின் போக்காக இருக்கும். இயற்கைக்கு அப்பால் வேதி - உயிர் ஆயுதங்களை போர் முனையில் பயன்படுத்துவதன் காரணமாகவோ, ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாகவோ இந்த ’டிசீஸ் எக்ஸ்’ புறப்பாடு செயற்கையாகவும் இருக்கக்கூடும். அப்படி உருவான தொற்றுப் பரவலை, அடையாளம் காணவே சில வருடங்கள் எடுத்துக்கொள்ளக் கூடுமாம்.

புதிய தொற்று

எப்படியாயினும், டிசீஸ் எக்ஸ் நோய்ப்பரவலை எதிர்கொள்ளும் வகையில் மருத்துவ கட்டமைப்புகளை திடமாக்கிக்கொள்வது உலக நாடுகளின் தவிர்க்க இயலாத கடமையாக மாறி உள்ளது. இதனையே டாக்டர் டெட்ரோஸ் அதானோம் போன்றவர்கள் உரக்க அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்டு இப்போதுதான் உலகம் பெருமூச்சு விடும் சூழலில், டிசீஸ் எக்ஸ் குறித்தான பீதிகள் பெரிதாக அலைக்கழிக்கத் தொடங்கியுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...


ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?

நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்

விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சிக்கிய சார்பதிவாளர்... கோவையில் பரபரப்பு!

சீனாவில் 7.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... வீடுகள் சேதம்; ரயில் சேவை பாதிப்பு - டெல்லியிலும் நில அதிர்வு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE