கோவை: கடந்த 28 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக பாடுபட்ட அரசுப் பேருந்து நடத்துநரை, நாளை (ஆக.15) நேரில் சந்தித்து குடியரசு தலைவர் பாராட்டி கெளரவப்படுத்துகிறார்.
கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்தவர் யோகநாதன் (59). இவர், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில், நகரப் பேருந்தில் நடத்துநராக (கண்டக்டர்) பணியாற்றி வருகிறார். அரசுப் பணியில் பணியாற்றி வந்தாலும், சுற்றுச்சூழல் மேம்பாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர். அந்த ஆர்வத்தின் காரணமாக, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமைச் சூழலை ஏற்படுத்தவும் மரங்கள் நடுதல் பணியை மேற்கொண்டு வருகிறார்.
அது தவிர, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவரது சுற்றுச்சூழல் ஆர்வத்தை பாராட்டிடும் வகையில், நம் நாட்டின் குடியரசு தலைவருடனான சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நடத்துநர் யோகநாதன் கூறியதாவது: "சுற்றுச்சூழல் மேம்பாட்டில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் அதிகம். எனவே, அரசுப் பேருந்து நடத்துநராக நான் பணியாற்றி வந்தாலும், கடந்த 28 ஆண்டுகளாக மரங்கள் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களிலும் 5 லட்சம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன்.
» பழநி அருகே ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்: பரிசாக தங்க நாணயங்கள்!
» புதுச்சேரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா: சிறைவாசிகள், விவசாயிகள் உற்பத்திக்கு வரவேற்பு
தவிர, விதை நேர்த்தி என்றால் என்ன, மண்ணுக்கு ஏற்ற மரங்கள் எவை, அவற்றை நட்டு வளர்த்தால் என்ன பலன், புற்கள், செடி, கொடிகள், மரங்கள் என்றால் என்ன, அதன் பயன்கள் என்ன என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் நேரில் கருத்தரங்குகள் நடத்தி அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதன்படி, மேற்கண்ட நிகழ்வுகள் தொடர்பாக 8,500 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். பணிக்கு விடுப்பு எடுத்துச் சென்று விட்டு விழிப்புணர்வுகளில் பங்கேற்று வருகிறேன்.
தனது சேவையை பாராட்டி தமிழக அரசின் சார்பில், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் விருது முன்னரே வழங்கப்பட்டுள்ளது. அது தவிர, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். இந்நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான எனது சேவையை பாராட்டி, ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தில் (ஆக.15) ‘அட் ஹோம் ரிசப்ஷன்’ என்ற நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் நடக்கவுள்ளது. இதில் குடியரசு தலைவர் நேரில் அழைத்து கெளரவப்படுத்துகிறார்.
இதில் பங்கேற்பதற்காக தற்போது புதுடெல்லி வந்துள்ளேன். இச்சூழலில், கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், இன்றைய சுதந்திர தின விழாவின் போது ‘கிரீன் சாம்பியன்’ விருதும் எனக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான் புதுடெல்லி வந்துள்ளதால், மனைவி கோவையில் தரப்படும் விருதினை பெற்றுக் கொள்கிறார்" என்று யோகநாதன் கூறினார்.