சுங்கச்சாவடியில் அதிகரிக்கும் மோதல்கள்... மேற்பார்வையாளர் உடலில் கேமரா பொருத்த உத்தரவு!

By காமதேனு

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்போர் - வாகனதாரிகள் இடையே அதிகரிக்கும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர, சுங்கச்சாவடி மேற்பார்வையாளருக்கு ’பாடி கேம்’ பொருத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை வாகனங்களில் கடக்கும் பயணிகளுக்கும், சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணியாளர்களுக்கும் இடையே மோதல் நேர்வது அதிகமாகி வருகிறது. பயணிகளின் பொறுமையின்மை, கட்டணம் பதிவதில் எதிர்பாரா கோளாறு, பாஸ்டேக் வேலை செய்யாதது, முந்திச்செல்ல முயலும் வாகனங்கள்... உள்ளிட்டவற்றால் சுங்கச்சாவடிகளில் பதற்றம் சூழ்கிறது. இவை தொடர்பான வாக்குவாதம் கைகலப்பில் முடிவதால், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் வாய்ப்பாகிறது.

சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவில் பதிவான தகராறு

முக்கியமாக அரசியல் கட்சியினர், அதிகார மட்டத்தினர் மற்றும் சட்ட விரோத நபர்களால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கடுமையாக தாக்கப்படுவதும் நடக்கிறது. இவற்றை முடிவுக்கு கொண்டுவர, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி சுங்கச்சாவடி மேற்பார்வையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் உடல்களில் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி முழுக்க ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்ற போதிலும், ஊழியர்கள் வசம் பொருத்தப்படும் ’பாடி கேம்’ மூலமாக, மோசமான சூழலை நெருக்கமாக பதிவு செய்யவும், அதனை ஆதாரமாக்கி பின்னர் நடவடிக்கை எடுக்கவும் முடியும். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அல்லது அவசரத் தகவலின் பெயரில், காவல்துறையை உடனடியாக வரவழைத்து நடவடிக்கை கோரவும் முடியும்.

பாடி கேம்

ஏற்கனவே பல்வேறு மாநிலங்களிலும் போக்குவரத்து போலீஸார் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோர் உடலில் இம்மாதிரியான பாடி கேம் பொருத்தப்பட்டு அவை செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பாணியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பாடி கேம் பொருத்த உத்தரவிடப்படுள்ளது.

முறை தவறும் பயணிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை மட்டுமன்றி, சுங்கச்சாவடி ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்களையும் நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது. இதன்படி, பணி நேரத்தில் சீருடையில் இருப்பது, பயணிகளை பொறுமையாக கையாள்வது உள்ளிட்டவை குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்துமாறும், அவர்களுக்கு அவசியமான நடத்தை பயிற்சிகளை வழங்குமாறும் நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE