2024 பட்ஜெட்: வசதியான விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்க திட்டம்?

By காமதேனு

இந்த ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் வசதியான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான வரி விதிக்க ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கைக் குழு உறுப்பினர் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

2024ம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) உறுப்பினர் ஆஷிமா கோயல் வரவிருக்கும் பட்ஜெட்டிற்கான தனது பரிந்துரையில், "நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நியாயமான வரிவிதிப்பு முறையை பின்பற்றும் வகையில், வசதியான விவசாயிகளுக்கு வருமான வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கலாம்.

ஆஷிமா கோயல்.

விவசாயிகளுக்கு அரசு நிதி பரிமாற்றம் செய்வது எதிர்மறை வருமான வரி போன்றது. இதனுடன் வசதியான விவசாயிகளுக்கு நேர்மறை வருமான வரி விதிப்பை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு குறைந்த வரி விகிதம் மற்றும் விலக்குகளுடன் இதை செயல்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 'பிஎம்-கிசான் சம்மான் நிதி' திட்டம் மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கி வருகிறது. இது மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு, பிப்ரவரி 24ம் தேதி அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

மத்திய பட்ஜெட்.

பிஎம்-கிசான் திட்டத்தின் 16வது தவணையை வரும் பிப்ரவரி முதல் மார்ச்-க்குள் மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முன்னதாக, திட்டத்தின் 15வது தவணை நிதி, கடந்த நவம்பர் 15ம் தேதி வழங்கப்பட்டது.

2018-19 டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் பிஎம் கிசான் திட்ட மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 3.03 கோடியாக இருந்தது. இது, 2022 ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 10.47 கோடியை எட்டியது. இருப்பினும், 2023 ஆகஸ்ட்- நவம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 8.12 கோடியாகக் குறைந்தது.

பிஎம்-கிசான் திட்டம்.

இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பிஎம் கிசான் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு உயர்த்தி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இருப்பினும் வசதியான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வரிவிதிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதை தவிர, வரிவிதிப்பு முறையில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


மசூதியை இடித்து கோயில் கட்டியதில் உடன்பாடில்லை... அடுத்த சர்ச்சை கிளப்பிய உதயநிதி!

காணும் பொங்கல்... கட்சியினருக்கு ஃபுல் பாட்டில் பிராந்தியுடன் உயிருடன் கோழியைப் பரிசளித்த எம்எல்ஏ!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குளறுபடி; திமுக அமைச்சரின் சதி... 2ம் இடம்பிடித்த மாடுபிடி வீரர் வழக்கு தொடர போவதாக பேட்டி!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோவில் கைது

தோனியின் தீவிர ரசிகர் மர்ம மரணம்; அதிர்ச்சியில் உறைந்த கடலூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE