புதுச்சேரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா: சிறைவாசிகள், விவசாயிகள் உற்பத்திக்கு வரவேற்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புது்ச்சேரியில் பாரம்பரிய காய், கனி, விதை உணவுத் திருவிழாவில் சிறைவாசிகள் தொடங்கி விவசாயிகள் வரை உற்பத்தி செய்ததை விரும்பி பொதுமக்கள் வாங்கினர். இனி வாரந்தோறும் ஞாயிறு நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி இயற்கை மற்றும் பாரம்பரிய உணவு நுகர்வோர் சங்கம் சார்பில் பாரம்பரிய காய், கனி, விதை உணவு திருவிழா இன்று தட்டாஞ்சாவடியில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது. இதன் தொடக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, விழுப்புரம் எம்.பி ரவிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அதில் பாரம்பரிய உணவுகள், நவதானியங்கள் மூலம் செய்யப்பட்ட உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில் சிறைச்சாலையில் விளைய வைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் அவர்கள் செய்த கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ''மைதா, எசன்ஸ் இல்லாமல் பாரம்பரிய உணவு கிடைத்தது. குறிப்பாக சிகப்பு சோளம், தினை, ரசாயனம் இல்லா உணவு, ஹெர்பல் பொருட்கள் விவசாயிகள் குறைந்த விலைக்கு கிடைத்தன. குறிப்பாக தினை, கம்பு, கேழ்வரகு என பாரம்பரியமானவை எல்லாம் கிடைத்தன." என்றனர்.

நிகழ்வில் பங்கேற்றோர் கூறுகையில், ''இங்கு விலை குறைவு. எளிதில் வெளியில் கிடைக்காத தரமான பொருட்கள் கிடைக்கும். வாரந்தோறும் நேரடியாக விவசாயிகள் விற்க தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டியை ஒதுக்கி தந்துள்ளனர். அடிக்காசாக ரூ. 50 மட்டுமே நிர்ணயித்துள்ளனர். இது விவசாயிகளுக்கு ஊக்கம் தரும். இனி நேரடியாகவே பாரம்பரிய பொருட்கள் சந்தைப்படுத்தலாம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE