மனம் திருந்திய 67 சாராய வியாபாரிகள் - இது திருப்பத்தூர் ‘திருப்பம்’

By KU BUREAU

திருப்பத்தூர்: மலை பகுதிகளைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் உட்பட 67 பேர் மனம் திருந்தி மாற்று தொழில் செய்ய தயாராக இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு அரசு சார்பில் மாற்றுத் தொழில் செய்து தர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடை செய்ய காவல் துறையினர் தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கள்ளச் சாராயம் தற்போது வரை ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜவ்வாதுமலை, நெக்னாமலை, மாதகடப்பாமலை, நாயக்கனேரி மலை, ஏலகிரி மலைகள் உள்ளன. இதேபோல, வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர மாநில எல்லைப் பகுதிகள், வனப்பகுதியை யொட்டியுள்ள இடங்களில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சாராய விற்பனை தொடர்பான விசாரணையும், அதற்கான விழிப்புணர்வுகளை கிராம மக்களிடமும், மலைவாழ் மக்களிடமும் ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல் துறையினர் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வால் திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைப் பகுதியிலும், மாவட்ட எல்லைப் பகுதியிலும் சாராய விற்பனை செய்து வந்த 67 பேர் மனம் திருந்தி இனி சாராய விற்பனையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழியை காவல்துறையினரிடம் அளித்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சியைச் சேர்ந்த கட்டிடத் தொழில் செய்து வந்த சடையாண்டி (38) என்பவர் கட்டிட தொழிலை காட்டிலும், சாராய விற்பனையில் அதிக வருவாய் கிடைத்ததால் கடந்த பல ஆண்டுகளாக முழு நேர சாராய வியாபாரியாக வலம் வந்தார்.

இந்நிலையில், தற்போது சாராய விற்பனையால் ஏற்படும் விபரீதங்களை உணர்ந்த சடையாண்டி சாராய தொழிலை முழுமையாக கைவிடுவதாக திருப்பத்தூர் எஸ்.பி., ஆல்பர்ட்ஜானிடம் கடிதம் வழங்கி மாற்று தொழிலுக்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சடையாண்டி மட்டுமல்லாது இதே போல, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 66 பேர் பல ஆண்டுகளாக செய்து வந்த சாராய தொழிலை கைவிடுவதாக கூறி எஸ்.பி. அலுவலகத்தில் கடிதம் வழங்கி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருப்பது திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூர் எஸ்.பி.,ஆல்பர்ட்ஜான், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்கள், பழங்குடியின மக்களிடம் சாராய விற்பனை யால் ஏற்படும் விபரீதம் குறித்து விளக்கினோம்.

ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு மற்றும் நெல்லிவாசல்நாடு ஆகிய கிராம ஊராட்சிகளில் ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 20 முதல் 30 பழங்குடியின குக்கிராமங்கள் உள்ளன. அவற்றில், 42 பழங்குடியினரின் வாழ் விடங்களை கொண்ட புதூர்நாடு, மிக தொலை தூரத்திலும், அடர்ந்த காடுகளால் சூழப் பட்டுள்ளன.

சட்டவிரோதமான சாராய விற்பனை நிறைந்த பகுதியாக இந்த பகுதியை கண்டறிந்தோம். சமவெளியில் இருந்து இந்த குக்கிராமங்களுக்கு நடந்து செல்ல குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும். அதேபோல, புதூர் நாட்டில் உள்ள 6 பழங்குடியின குக்கிராமங்களையும், மாதகடப்பாமலை பகுதியில் உள்ள 3 குக்கிராமங்களில் சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்யும் பகுதியாக கண்டறிந்தோம்.

இதேபோல், தமிழக-ஆந்திரா எல்லை கிராமமான கோரிப்பாளையத்தில் மூன்று 'பிளாக் ஸ்பாட்'களும் சாராய விற்பனை செய்யும் இடமாக கண்டறியப்பட்டன. இதுமட்டுமின்றி கோரிப்பாளையத்தில் கிராம கண்காணிப்பு குழு ஒன்றை (விவிசி) காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் பழங்குடியின முதியவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் உள்ளனர்.

மேலும், புதூர் நாடு பகுதியில் உள்ள காவல் நிலையம் வார இறுதி நாட்களில் மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போது, ஒரு உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 6 காவலர்களை கொண்ட புறக்காவல் நிலையமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலை பகுதியில் காவலர்கள் நிரந்தரமாக தங்க இட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

சாராய விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்திய முன்னாள் சாராய வியாபாரிகளின் மறுவாழ்வு குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜுடன் மூன்று சுற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். மலை பகுதிகளில் மீண்டும் விவசாய பணிகளை தொடங்க நிதியுதவியும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE