சிதம்பரத்தில் கதர் துணியில் தேசியக்கொடி தயாரித்து தரும் டெய்லருக்கு பாராட்டு

By க. ரமேஷ்

கடலூர்: சிதம்பரத்தில் கதர் துணியில் தேசியக்கொடி தயாரித்து தரும் டெய்லருக்கு பள்ளி விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் குடியரசு, சுதந்திர தின விழாக்களை விமரிசையாக கொண்டாடும் வகையில் தேசியக் கொடி நாடு முழுவதிலும் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் கொடிகளை தவிர்க்கும் வகையில் சிதம்பரம் மாலைகட்டி தெருவில் டெய்லர் கடை நடத்தி வரும் பி.நந்தகோபால் கதர் துணியில் தேசியக் கொடிகளை தயாரித்தளித்து வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாக யாவரும் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் கதர் துணியில் தேசியக் கொடிகளை தயாரித்து சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பள்ளி, கல்லூரிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார் இவர். இவருக்கு முன்னதாக இவரது தந்தை சி.பெருமாள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இதேபோல் கதர் துணியில் தேசிய கொடிகளை தயாரித்து வழங்கி வந்தார். தந்தையின் வழியில் இப்போது இவரும் ஆண்டுதோறும் சுதந்திரத் தினம் மற்றும் குடியரசு தினங்களின் போது கதர் துணியில் தேசியக் கொடிகளை தயாரித்து குறைந்த விலையில் வழங்கி வருகிறார்.

தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையா என்பவரின் பிறந்த தினத்தை முன்னிட்டும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டும் இன்று சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியை பி.எழிலரசி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் டெய்லர் பி.நந்தகோபால் கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் ஆசிரியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE