சிறுதானிய தயாரிப்புகளின் விலை குறைகிறது; நாளைய ஜிஎஸ்டி கூட்டத்தில் முக்கிய முடிவு!

By காமதேனு

நாட்டில் சிறுதானியப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சிறுதானிய தயாரிப்புகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட இருக்கிறது. நாளை(அக்.7) நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.

நாட்டின் பாரம்பரிய விவசாயிகளை காக்கவும், சத்துக்கள் மிகுந்த சிறுதானியத்தின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் முன்னெடுப்பு காரணமாக நடப்பு ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐநா அமைப்பு அறிவித்துள்ளது.

சிறுதானிய உணவு

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு கூட்டங்களில் தொடங்கி, நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு வரை சிறுதானிய உணவுகள் முக்கிய இடம் பிடித்தன. சிறுதானியம் பயிரிடுவதை ஊக்குவிப்பது முதல் நுகர்வோர் அதனை விரும்பி பயன்படுத்துவது வரை, அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும், சிறுதானியம் பயிரிடப்படுவதன் பரப்பு குறைவு என்பதாலும், சிறுதானிய விவசாயிகளுக்கான அரசின் வேளாண் உதவிகள் இன்னமும் முழுமையாக சென்று சேராததாலும், சந்தையில் சிறுதானியம் மற்றும் அதனால் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

சிறுதானியங்கள்

இதனை கருத்தில் கொண்டே தற்போது சிறுதானிய தயாரிப்பிலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுதானியத்தை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுக்கு, 12% முதல் 18% வரை என்பதாக இருந்த ஜிஎஸ்டி, இனி 5% முதல் பூஜ்ஜியம் வரை அதிரடியாக குறைக்கப்பட இருக்கிறது.

சிறுதானிய தயாரிப்பு என்பதற்கான அடிப்படை நிபந்தனையாக, குறிப்பிட்ட பொருளில் குறைந்தது 70% சிறுதானிய சேர்மானம் இருந்தாக வேண்டும். மும்பையில் நாளை நடைபெறவிருக்கும் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE