அரிதான அஞ்சல் தலைகள், உறைகளுடன் காட்சிக் கூடம் - முன்னாள் ராணுவ அதிகாரியின் முயற்சி!

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிகவும் அரிதான அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகளுடன், தனது வீட்டின் ஒரு அறையை நிரந்தர தபால் காட்சிக்கூடமாக மாற்றியிருக்கிறார் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் மா.சுந்தரம்.

தூத்துக்குடி ராஜீவ் நகர் மேற்கு கோக்கூர் சாலைப் பகுதியில் வசித்து வருபவர் லெப்டினட் கர்னல் மா.சுந்தரம் (76). இந்திய ராணுவத்தின் அஞ்சல் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், 5,000-க்கும் மேற்பட்ட மிகவும் அரிதான அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகளை சேகரித்துள்ளார்.

நாட்டின் வரலாறு, பாதுகாப்பு படைகளின் முக்கியத்துவம், அஞ்சல் சேகரிப்பின் ஆர்வம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு இடங்களில் அஞ்சல் தலை கண்காட்சிகளை அவ்வப்போது நடத்தி வருகிறார்.

நிரந்தர காட்சிக்கூடம்: அரிதான அஞ்சல் தலைகள் மற்றும் உறைகளுடன் தனது வீட்டில் நிரந்தர அஞ்சல் காட்சிக்கூடம் அமைக்க வேண்டும் என்பது இவரது பல ஆண்டு கனவு. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது. தனது வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையை பிரத்யேக அஞ்சல் காட்சிக்கூடமாக தற்போது அவர் மாற்றியுள்ளார். கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி இந்த அஞ்சல் காட்சிக்கூடத்தை, தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் திறந்து வைத்தார்.

கனவு நிறைவேறியது: இதுகுறித்து, கர்னல் சுந்தரம், 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது , “பள்ளி, கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில், வீட்டில் நிரந்தரமாக அஞ்சல் தலை மற்றும் உறைகள் கண்காட்சி அமைக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. தற்போது அந்த கனவு நிறைவேறியது.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் சுந்தரம்
உருவாக்கியுள்ள அஞ்சல் காட்சிக்கூடம்.

இந்த அஞ்சல் காட்சிக்கூடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட அபூர்வமான அஞ்சல் தலைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட அஞ்சல் உறைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கவுரப்படுத்த 17, 18, 19-ம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகளை இங்கே காட்சிப்படுத்தியுள்ளேன்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை குறித்தும், போர்களில் இந்தியா பெற்ற வெற்றிகள், போர்க்கருவிகள், வெளிநாடுகளில் இந்திய ராணுவம் பணியாற்றிய சிறப்புகள் மற்றும் முக்கிய ராணுவ தளபதிகளை கவுரவப்படுத்த வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகள், உறைகள் இடம் பெற்றுள்ளன.

மேலும், அஞ்சல் துறையின் வளர்ச்சி, ராமாயணம், மகாபாரதம், நாட்டின் பாரம்பரிய கலைகள், தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் ஆகியவை தொடர்பான அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் உறைகளையும் காட்சிப்படுத்தியுள்ளேன்.

மாணவர்களுக்கு ஏற்பாடு: இந்திய பாதுகாப்பு படைகளின் அரிய பணிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகம், நாட்டின் பாரம்பரியம், கலச்சாரம் போன்றவற்றை, இன்றைய இளைய தலைமுறையினர் அறிய வேண்டும். எனவே, இந்த அஞ்சல் காட்சிக்கூடத்தை அனைவரும் பார்வையிட வேண்டும். இதனை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக வந்து பார்வையிடலாம். இதுதொடர்பாக, மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விரைவில் தபால் அனுப்ப உள்ளேன். மேலும் விவரங்களை அறிய 94878 48922 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE