கோவை: பழங்காலத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்தவை மேடை நிகழ்ச்சிகள் தான். நாடகங்கள், இன்னிசைக் கச்சேரிகள் போன்ற மேடை நிகழ்ச்சிகளின் வரிசையில் மேஜிக் நிகழ்ச்சியும் ஒன்று.
ஏமாறுவதையும், ஏமாற்றுவதையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி மேஜிக் மட்டுமே. தமிழகத்தில் அழியும் நிலையில் உள்ள இக்கலையை காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கோவை குறிச்சி நஞ்சபோயர் தெருவைச் சேர்ந்த மேஜிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் பழனிவேல்ராஜன் மற்றும் மேஜிக் கலைஞர் சுபாஷ் ஆகியோர் கூறியதாவது: குழந்தைகளையும், பெரியவர்களையும் மகிழ்விக்கும் கலைகளில் மேஜிக் நிகழ்ச்சிக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. அப்போதெல்லாம், இரவு முழுவதும் மேஜிக் நிகழ்ச்சி நடந்தாலும் ரசிகர்கள் சிறிதும் சோர்வடையாமல், மேஜிக் கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் விசில் அடித்தும், கை தட்டி ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்துவர்.
நான் படித்த பள்ளியில் நடைபெற்ற மேஜிக் நிகழ்ச்சிக்கும், மேஜிக் கலைஞருக்கும் கிடைத்த வரவேற்பே எனக்கு மேஜிக் நிபுணர் ஆக வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது. பிஏ பட்டம் பெற்ற நிலையில், தன்னிச்சையாக மேஜிக் பயிற்சி மேற்கொண்டேன். அதன்பின்னர், மேஜிக் நிபுணர்கள், நண்பர்களின் உதவியுடன் மேஜிக் செய்வதில் முறையாக பயிற்சி மேற்கொண்டேன்.
» வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு
» ‘அரசியலமைப்புக்கு எதிரானது’: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
நான் கடந்த 25 ஆண்டுகளாக மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். மேஜிக் கலையில் உடல்மொழி, வேகம், நேரம், தயக்கமின்மை ஆகியவை மிகவும் முக்கியம். இதில் ஏதேனும் ஒன்றில் தவறு நிகழ்ந்தாலும், ‘மேஜிக் ஷோ’ என்பது ‘காமெடி ஷோ’வாக மாறிவிடும். கோயில் திருவிழாக்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு என தனித்தனியாக நிகழ்ச்சிகளை வடிவமைத்து தொகுத்து, மேஜிக் செய்து வருகிறேன்.
பூக்கள், பலூன், தீ, டேபிள், பேப்பர், தண்ணீர், கார்டுகள், ஸ்பூன், பந்து என பல்வேறு பொருட்களைக் கொண்டு மேஜிக் செய்து வருகிறேன். காலி டப்பாவுக்குள் காசு வரவைப்பது, காலி கூண்டுக்குள் புறா, முயல் வர வைப்பது, ஒரு நபரின் தலையை மறைய வைத்து மீண்டும் வரவைப்பது, மனிதனை அந்தரத்தில் மிதக்க வைப்பது, பெட்டிக்குள் செல்லும் நபரை மறைய வைப்பது, காகிதத்தை கிழித்து மீண்டும் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான மேஜிக்குகள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அறிவியலின் அதீத வளர்ச்சியால் டிவி, மொபைல் போன்கள், தியேட்டர்கள் என தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. நாடகமும், இன்னிசையும் தொலைக்காட்சிக்குள் தஞ்சம் புகுந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் கிராபிக்ஸை பயன்படுத்தி மேஜிக் செய்யும் கலைஞர்களை, வீட்டில் இருந்தே மக்கள் கண்டுகளிக்கத் தொடங்கி விட்டனர்.
இதனால், நிஜ மேஜிக் கலைஞர்களுக்கான மவுசு குறைந்தது. அதுமட்டுமின்றி, ‘யு-டியூபர்ஸ்’ சிலர் தங்களது வியாபார நோக்குக்காக, மேஜிக் நிகழ்ச்சியில் கடைபிடிக்கப்படும் தந்திரங்களை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டனர்.
இதனால், மேஜிக் நிகழ்ச்சியின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. மேஜிக் நிகழ்ச்சி ஏதுமின்றி, பல மேஜிக் நிபுணர்கள் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே மேஜிக் கலைஞர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மேஜிக் நிபுணர்கள் பலரும் ஒருங்கிணைந்து, மேஜிக் நிகழ்ச்சி தொடர்பாகவும், சமூக முன்னேற்றம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
மேஜிக் நிகழ்ச்சியில் கிடைக்கும் மனநிறைவு, வரவேற்பை அறிந்த இளைஞர்கள் பலர், இக்கலையை கற்க தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து, அதனுடன் மேஜிக் கலையையும் கற்றுக்கொள்ளும் இளைஞர்களுக்கு, வெளிநாடுகளில் உள்ள உணவகங்கள்,கப்பல்களில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது.
தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள், அரசு பொருட்காட்சி,அரசியல் தலைவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மேஜிக் நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதியளிக்க வேண்டும். மேலும், சிறப்பு விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும் வித்தியாசமாக வரவேற்கும் வகையில் தமிழகத்தில் உள்ள ஸ்டார் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், நிறுவனங்களில் மேஜிக் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால்,எங்களை போன்ற கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
மேஜிக் கற்க ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க ஏதுவாக மாநில அளவில் மேஜிக் அகாடமி தொடங்க வேண்டும் என்பது மேஜிக் கலைஞர்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு மற்றும் தன்னார்வலர்கள், மேஜிக் கலை நிபுணர்களின் நிதியுதவியுடன் மேஜிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் மேஜிக் அகாடமி தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தால், மேஜிக் கலை புத்துயிர் பெறும், என்றார்.