விளாச்சேரியில் விற்பனைக்கு தயார் நிலையில் நவராத்திரி கொலு பொம்மைகள்!

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை மாவட்டம் விளாச்சேரியில் புதிய ரக நவராத்திரி கொலு பொம்மைகள் உற்பத்தி செய்யப்பட்டு முன் கூட்டியே விற்பனை தொடங்கியுள்ளது. வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் வருவதால் பொம்மைகளைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு, சமையலுக்கு பயன்படும் மண்பானைகள் முதல் கலைப் பொருட்கள் வரை தயாரிக்கின்றனர். அந்த வகையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு புதிய ரக கொலு பொம்மைகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய மண்பாண்டக் கலைஞர் ரா.ஹரிகிருஷ்ணன், "இந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. அதனையொட்டி ஏராளமான புதிய ரக களிமண் பொம்மைகள், காகிதக் கூழ் பொம்மைகளை உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளன. புதிய ரகங்களான அயோத்தி ராமர், அஷ்ட ஆஞ்சநேயர், நிச்சயதார்த்த தொகுப்பு, ஆண்டாள் பெயர் சூட்டுதல், சிறுவர்களுக்கான தாயம் விளையாட்டு, பல்லாங்குழி விளையாட்டு தொகுப்பு.

நவ நரசிம்மர், அஷ்டவராஹி, அஷ்டபைரவர், அஷ்டதிக் பாலகர் ஆகிய புதிய தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம். இவற்றுக்கு மக்களிடையே நல்ல வரவேற்புள்ளதால் தற்போதே வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. மேலும், வழக்கம் போல் திருப்பதி பிரம்மோற்சவம், மீனாட்சி திருக்கல்யாணம், ராமாயண கதைகள், கிரிவலம், சீனிவாசப் பெருமாள் திருமணம், மனிதர்கள் திருமணம், வளைகாப்பு, சாப்பாடு, காதணி விழா போன்றவற்றையும் பொம்மை தொகுப்புகளாக உருவாக்கியுள்ளோம்.

இதில், திருவள்ளுவர், தேசியத் தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், பாரதியார் போன்ற களிமண் பொம்மைகளும் உள்ளன. இதுபோன்று 150 வகையான தொகுப்புகள் உள்ளன. கதைகளைப் பொறுத்து ஒரு தொகுப்பில் 4 முதல் 10 எண்ணிக்கையிலான பொம்மைகள் உள்ளன. இவை ரூ.50 லிருந்து ரூ.1100 வரையிலான விலைகளில் கிடைக்கும். காகிதக்கூழில் 12 இஞ்ச் முதல் 4 அடி உயரம் வரை பொம்மைகள் தயாரிக்கிறோம்.

இது ரூ.350 முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான விலைகளில் கிடைக்கும். பொம்மைகளின் அளவுக்கேற்றவாறு அவற்றின் விலையை நிர்ணயிக் கிறோம். தற்போது ஆடிப்பெருக்கிலிருந்து புதிய ரக தொகுப்புகளையும் காட்சிப்படுத்தியுள்ளோம். கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய வெளிமாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஆன்லைன் மூலம் பொம்மைகள் கேட்டு ஆர்டர்கள் வந்துள்ளன" என்று ஹரி கிருஷ்ணன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE