கணவன் இறந்ததில் மனநிலை பாதித்த மனைவி... 27 வார கருவைக் கலைக்க கோர்ட் அனுமதி

By காமதேனு

கணவர் இறந்ததில் மனநிலை பாதித்த மனைவியின் 27 வார கருவைக் கலைக்க, நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளின் விசாரணை மற்றும் அவற்றில் வெளியாகும் தீர்ப்புகள் ஆகியவை, இதர வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமைவது வழக்கம். முந்தைய வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், அதையொத்த இதர வழக்குகளின் தீர்ப்புகளை நீதிமன்றங்கள் முடிவு செய்யும். மனுதாரர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களும் இந்த முன்னுதாரணங்களை காட்டியே வாதிடுவார்கள். ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பினை முன்மாதிரியாக கொள்ளக்கூடாது என்ற அறிவிப்புடன் டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கொன்றின் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

சட்டம் அனுமதிக்கும் 24 வாரங்களை கடந்த கருவைக் கலைக்க கருவை சுமந்திருக்கும் பெண் சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. கணவர் உயிரிழந்ததால் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் உச்சமாக தனக்குத்தானே தீங்கு விளைவிப்பவராகவும் அப்பெண் இருப்பதால், அவரது 27 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. சட்டப்படி இதற்கு அனுமதி இல்லாததால், சிறப்புக் காரணங்களை நீதிமன்றம் பரிசீலித்தது.

அதன்படி எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட கர்ப்பவதியின் மனநலனை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அப்பெண்ணால் தன்னையும், தனக்கு பிறக்கவிருக்கும் சிசுவையும் முறையாக பராமரிக்க முடியுமா என்ற ஆலோசனையை மருத்துவர்களிடம் நீதிமன்றம் பெற்றது. நிறைவாக 27 வார கருவை மருத்துவ முறைப்படி கலைக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் தலைமையிலான அமர்வு, அரிதான இந்த வழக்கினை முன்னுதாரணமாக கருதக்கூடாது எனவும் தெளிபடுத்தி இருந்தது.

கர்ப்பவதி

24 வாரங்களைக் கடந்த கர்ப்பத்தை கலைப்பதற்கு சட்டம் அனுமதிக்காது என்றபோதும், அவரது உடல்நிலை, மனநிலை, குழந்தைப்பேறு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தற்போதைய 27 வார கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதித்தது. கர்ப்பவதியின் தனியுரிமையை கருத்தில் கொண்டு அவரது பெயர் வெளியிடப்படாததோடு, எக்ஸ் என்ற அடையாளத்தில் மட்டுமே அவர் வழக்கு நெடுக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிரடி! தமிழகம் முழுவதும் 1847 காவலர்கள் இடமாற்றம்!

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

மம்தாவிடம் பிச்சை கேட்கவில்லை... காங்கிரஸ் கடும் கோபம்!

ஓடும் காருக்குள்ளேயே நடந்த கல்யாணம்! சினிமாவை விஞ்சிய காதல் ஜோடி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE