காஞ்சிபுரம்: நெசவாளர் சேவை மையம் மூலம் தேசிய கைத்தறி தினவிழா கொண்டாட்டம்

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட நாளான இன்று ஆகஸ்ட் 7ம் தேதியையொட்டி தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது. சுதேசி இயக்கத்தின் நினைவாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சுதேசி இயக்கம் அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 1905ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தொடங்கப்பட்டது. கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நெசவாளர்களை ஊக்குவிக்கவும், நெசவுத் தொழிலுக்கு உத்வேகம் அளிக்கவும், நெசவாளர்களை பெருமைப்படுத்தவும் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட இந்த நாளில் இந்திய தேசிய கைத்தறி தின விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது

காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற கைத்தறி தின விழாவில், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய இயக்குநர் பி.வாசு வரவேற்றார். காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். விழாவில் கைத்தறி வளர்ச்சிக்கான திட்டங்கள், முத்ரா கடன் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து விழாவில் நெசவாளர்களின் வெற்றிக் கதைகள் தொடர்பான படங்கள் திரையிடப்பட்டன.

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கைத்தறியால் அழகுற வடிவமைக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்பட்டுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் நெசவாளர் சேவை மையம் மூலம் 30 பேருக்கு தேசிய விருதுகள் கிடைக்க உதவி செய்தது குறித்து விளக்கப்பட்டது. விழாவின் நிறைவு பகுதியாக தொழில்நுட்ப மேலாளர் கோ.பானு நன்றியுரையாற்றினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE