மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியில் இறந்த நிலையில் முதலை மீட்பு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்தேக்க பகுதியான செட்டிப்பட்டி பரிசல்துறை பகுதியில், இறந்த நிலையில் நீரில் வந்த முதலையை மீட்கப்பட்டது.

கர்நாடகவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பின. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30-ம் தேதி மாலையில் எட்டியது. அதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து அதிகபட்சமாக 1.70 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது, 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், ஆடி பெருக்கு, அமாவாசையையொட்டி, காவிரி கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வருவாய் துறை, காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் கரையோரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான செட்டிப்பட்டி பரிசல்துறை பகுதியில் சனிக்கிழமை மாலை முதலை ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து வந்தது. இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்து, வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், வனச்சரக அலுவலர் சிவனாந்தம் மற்றும் தீயணைப்பு அலுவலர் வெங்கடேஷ் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை கயிறு கட்டி மீட்டனர். இறந்த முதலையை கால்நடை மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்து, பச்சபாலமலை வனப்பகுதியில் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை புதைத்தனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீருக்கு அடியில் இருந்த முதலை மேற்பகுதிக்கு வந்து உலவியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் இறந்த நிலையில் மீட்கப்பட்ட முதலை, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தென்பட்டதாக இருக்குமோ என வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE